BSNL Subscribers: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! புதியதாக பிஎஸ்என்எல் சிம் வாங்கிய 25 லட்சம் பேர் - காரணம் என்ன?
BSNL Subscribers: பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் சேவையை, கடந்த சில வாரங்களில் மட்டும் புதியதாக 25 லட்சம் பேர் பெற்றுள்ளனர்.
BSNL Subscribers: தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தியதால், பொதுமக்கள் பிஎஸ்என்எல் சேவை மீது ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
கட்டணத்தை உயர்த்திய தொலைதொடர்பு நிறுவனங்கள்:
ஜியோ, ஏர்டெல் மற்றும் VI (வோடாஃபோன் ஐடியா) ஆகிய தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள், தங்கள் சேவை கட்டணங்களை உயர்த்தியுள்ளதால், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் எழுச்சியைக் காண்கிறது. சமீப காலமாக தனியார் நிறுவனங்களிடம் போட்டியிட முடியாமல் போராடி வந்த அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர், இப்போது தனியார் ஆபரேட்டர்களின் கட்டண உயர்வால் பயனை பெற்று வருகிறது. ஜூலை 3 மற்றும் ஜூலை 4 ஆம் தேதிகளில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை 11-25% உயர்த்தியதன் காரணமாக, BSNL புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பைக் கண்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
BSNL க்கு மாறும் மற்ற நிறுவன பயனாளர்கள்:
எகானமிக்ஸ் டைம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமீபத்திய வாரங்களில் BSNL கணிசமான எண்ணிக்கையிலான புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் சமீபத்திய கட்டண உயர்வுதான் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம். கட்டண உயர்வு காரணமாக சமூக ஊடகத்தில் 'BoycottJio' மற்றும் 'BSNL ki ghar wapsi' போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளன. கட்டண உயர்வுக்குப் பிறகு, சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (MNP) மூலம் BSNLக்கு மாறியுள்ளனர்.
பயனர்களை ஈர்க்கும் கட்டணங்கள்:
பிஎஸ்என்எல் சுமார் 2.5 மில்லியன் அதாவது 25 லட்சம் புதிய இணைப்புகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. BSNL இன் கட்டணங்கள், குறைந்த வருமானம் கொண்ட பயனர்களுக்கு மலிவு விலையாக இருப்பது தான் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். தனியார் ஆபரேட்டர்கள் தங்கள் கட்டணங்களை 11-24% உயர்த்தியிருந்தாலும், BSNL இன் கட்டணங்கள் இன்னும் போட்டித்தன்மையுடன் உள்ளன. உதாரணமாக, Vi இன் வருடாந்திர தரவுத் திட்டம் அதிகபட்சமாக ரூ.600 ஆக அதிகரித்துள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸின் 365-நாள் செல்லுபடியாகும் வருடாந்திர பேக்குகளின் விலை ரூ.3,599 ஆக உள்ளது. அதேநேரம், ஓராண்டிற்கான் BSNL பேக்கின் விலை ரூ.2,395. இதேபோல், தனியார் ஆபரேட்டர்களின் 28 நாள் பேக்குகளின் சராசரி விலை ரூ.189-199 ஆக இருக்க, இதே போன்ற பலன்களைக் கொண்ட BSNLன் பேக்குகள் ரூ.108 இல் தொடங்குகின்றன.
4ஜி மற்றும் 5ஜிக்கு மாறுதல்:
பிஎஸ்என்எல் வேகமாக 4ஜி சேவயை நோக்கி நகர்கிறது, விரைவில் அதை 5ஜிக்கு மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. BSNL ஆனது சிறந்த நெட்வொர்க்கிற்கு மேம்படுத்தப்படும்போது, பயனர்களின் விருப்பத்தேர்வுகள் எவ்வாறு BSNL பக்கம் மாறுகின்றன என்பதை பொருத்து இருந்து பார்க்க வேண்டும். 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளுக்கு மேம்படுத்தப்பட்ட பிறகும், BSNL அதன் மலிவு கட்டணத்தை பராமரிக்குமா என்பது கேள்வியாகவே உள்ளது.