Amazon Astro Robot | இது உங்களின் நலன் விரும்பி! - அமேசானின் புதிய ரோபோ அறிமுகம்!
ஆஸ்ட்ரோ ரோபோவை உருவாக்குவதில் பிரபல வால்ட் டிஸ்னியுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தது அமேசான் நிறுவனம்.
பிரபல அமேசான் நிறுவனம் தற்போது புதிய வகை ரோபோ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோவிற்கு ஆஸ்ட்ரோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியான நாய் போன்ற தோற்றத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள ஆஸ்ட்ரோவை குரல் கட்டளை மூலம் இயக்க முடியும் . குறிப்பாக அமேசானின் வாய்ஸ் அசிஸ்டன் கருவியான ‘அலெக்ஸா’ மூலமாகவும் கட்டுப்படுத்த முடியுமாம். முழுக்க முழுக்க வீட்டு தேவைகளுக்காகவே இந்த ரோபோவை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டை பராமரிப்பது, கண்காணிப்பது போன்ற வேலைகளை ஆஸ்ட்ரோ செய்யும்.
ஆஸ்ட்ரோ ரோபோவிற்கு முகமாக ஒரு திரை கொடுக்கப்பட்டுள்ளது . அதில் கண்களை போன்ற வடிவத்தை கொடுத்துள்ளனர் வடிவமைப்பாளர்கள். பார்ப்பதற்கு சாதுவாக இருக்கிறது. தேவையான நேரங்களில் பாடல்களை ஒலிக்க செய்வது, தனது உரிமையாளர் இடும் கட்டளைகளை அப்படியே ஏற்று நடப்பது, பாடலுக்கு ஏற்ற மாதிரியாக நடனமாடுவது உள்ளிட்ட பல வேலைகளை ஒரு குழந்தையை போல செய்கிறது ஆஸ்ட்ரோ. “ஆஸ்ட்ரோ ஃபாலோ “ என்றால் போதும் ஒரு நாய்க்குட்டி போல ஓடி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் வீடியோ ஒன்றில் , ஆஸ்ட்ரோவின் உரிமையாளர் ஒருவர் சமையலறையில் கேஸை அனைத்துவிட்டேனா என பார் ஆஸ்ட்ரோ என கூறி அதற்கு வீடியோ கால் செய்கிறார். சமையலறைக்கு சென்ற ஆஸ்ட்ரோ தனது தலையை உயர்த்தி உரிமையாளருக்கு கேஸ் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை காட்டுகிறது. குறிப்பிட்ட அளவிற்கு இதன் கேமராவை உயர்த்தும் வகையில் இதனை உருவாக்கியுள்ளனர். திரைக்கு பின்னால் ஒரு டியூப் போல கேமரா அமைந்துள்ளது. மேலும் வீடியோ கால் செய்வது, திரையில் வீடியோக்களை பிளே செய்வது உள்ளிட்ட வேலைகளையும் ஆஸ்ட்ரோவால் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் குளிர்பான பாட்டில்கள் மற்றும் ஸ்னாக்ஸை சுமந்து செல்லும் அளவிற்கு ஆஸ்ட்ரோவின் முதுகில் சிறு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. செல்லும் வழியில் ஏதேனும் தடை இருந்தாலோ , அல்லது தன்னால் பயணிக்க முடியாத பகுதியாக இருந்தாலோ அதனை உணர்ந்து தனது திசையை மாற்றிக்கொள்கிறது ஆஸ்ட்ரோ. பேட்டரி மூலம் இயங்கும் ஆஸ்ட்ரோ தன்னிச்சையாக செயல்படுகிறது. அதற்கு தேவையான சார்ஜை அதுவே செய்துகொள்கிறது.
ஆஸ்ட்ரோ ரோபோவை உருவாக்குவதில் பிரபல வால்ட் டிஸ்னியுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தது அமேசான் நிறுவனம். இதன் மூலம் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கான ரோபோவை டிஸ்னியுடன் இணைந்து உருவாக்கலாம் அல்லது ஆஸ்ட்ரோ ரோபோவிலேயே டிஸ்னி கதாபாத்திரங்களின் சாயலை காணும் வகையில் உருவாக்கப்படலாம். அமேசான் லேப் திட்ட இயக்குநர் சூரி மதுலா கூறும் பொழுது "It's taking science fiction and making it a reality" அதாவது “அறிவியல் புனைக்கதைகளாக மட்டுமே இருந்த ஒன்றை நிஜமாக்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார். பார்ப்பதற்கே கியூட்டாக களமிறங்கிருக்கக்கூடிய இந்த ரோபோவானது 999 டாலர் என்ற அறிமுக விலையில் களமிறங்கியுள்ளது. இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் ரூபாயாகும். இன்னும் சில நாட்களுக்கு பிறகு ஆஸ்ட்ரோவின் விலை $1,449 டாலர் என்ற நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மாறிவிடும். அதாவது இந்திய மதிப்பில் 1 லட்சம் என்பதுதான் இந்த ரோபோவின் ஒரிஜினல் விலை.