Sports in Afghanistan: தகர்க்கப்படும் பதக்க கனவுகள்.. ஆப்கானின் விளையாட்டு எதிர்காலம் என்னவாகும்?
தலிபான்கள் அதிகாரத்தில், பெண்களுக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக மறுக்கப்பட ஆண்கள் விளையாட்டிலும் பல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
தப்பிப் பிழைக்கும்போது ஓடும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து ஆப்கான் கால்பந்து வீரர் பலி
”தூக்கம் வரல, அமைதி வேணும்” – பிரபல ஆப்கான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்
பாராலிம்பிக்கில் பங்கேற்க இருந்த ஆப்கானின் முதல் வீராங்கனை டோக்கியோ செல்ல தடை
”எங்கள காப்பாதுங்க..” உதவியை எதிர்ப்பார்த்து கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் ஆப்கான் கால்பந்து வீராங்கனைகள்
இவை, கடந்து சில நாட்களாக ஆப்கானிஸ்தானைச் சுற்றி ஒலித்து கொண்டிருக்கும் விளையாட்டு சம்பந்தமான அவலச் செய்திகள். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து, நாடும் நாட்டு மகக்ளும் தப்பிக் பிழைக்க திசை தெரியாது ஓடி கொண்டிருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அதடுத்து கிடைக்கும் தகவல்கள், மனதை பதைபதைக்க வைக்கின்றது. பெண்கள், குழந்தைகள், சுதந்தரம், பொருளாதாரம் என ஒவ்வொன்றும் நிலை அறியாது கைவிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் ’விளையாட்டு’ துறையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
காபுல் விமானநிலையத்தில் பதற்ற நிலை நிலவுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. கூட்டம் கூட்டமாக காபுல் விமானநிலையத்தில் குவிந்துள்ள மக்கள், நாட்டைவிட்டு வெளியேற போராடி வருகின்றனர். விமானத்தின் டயரை பிடித்து கொண்டாவது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முனைப்பில் இருவர் உயிரைவிட்டனர்.
விமானத்தில் இருந்து கீழே விழுந்த நபர் ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணி வீரர் ஜாகி அன்வாரி. 19 வயதேயான ஜாகி, காபூலில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது 16 வயது முதல்தான் கால்பந்து விளையாடி வருகிறார். சர்வதேச விளையாட்டு தளத்தில், ஆப்கானிஸ்தானின் பெயர் அங்கும் இங்குமாக கவனிக்க வைக்க தொடங்கிய காலக்கட்டத்தில் மீண்டும் இப்போது பின்னோக்கி செல்லும் அபாயத்தில் உள்ளது.
தலிபான்கள் அதிகாரத்தில், பெண்களுக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக மறுக்கப்பட ஆண்கள் விளையாட்டிலும் பல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கால்பந்துதான் தனது எதிர்காலம் என கனவு கொண்டிருந்த ஜாகி, உயிர் பிழைத்தால் போதும், வேறு நாட்டிற்கு சென்றாவது வாழ்துவிடலாம், ஒரு நாள்… இந்த சூழல் மாறும், அமைதி திரும்பும், ஆப்கானிஸ்தானின் கொடி ஏந்தி சர்வதேச ஃபோடியம்களில் பதக்கம் வெல்ல கனவு கண்டிருப்பார். கனவு காண வானம் எல்லை இல்லை என கேட்டு வளரும் குழந்தைகளுக்கு மத்தியில், வானிலேயே தனது கனவை தொலைத்துவிட்டார் ஜகி, இல்லை தொலைத்துவிடப்பட்டார் என்பதுதான் உண்மை.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், பதக்கங்களை வென்று குவிக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு அவர்களது நாட்டு அரசு பரிசுகளையும், வாழ்நாளுக்குமான இலவச விமான டிக்கெட்டுகளையும் வழங்கி கொண்டாடி வருகின்றது. ஆனால், ஆப்கானிஸ்தானில் நிலைமை வேறு! விமான டிக்கெட் வாங்குவதற்கு போதுமான பணம் இல்லாததாலும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டும், முயற்சிகள் முடக்கப்பட்டும் வீரர் வீராங்கனைகள் வருந்தும் நிலை அரங்கேறி வருகிறது. இங்கு, இவர்களுக்கு தேவை சொகுசு விமான டிக்கெட் அல்ல, உயிர் பிழைத்து வாழ ஒரு பாதுகாப்பான இடமும், அங்கு செல்வதற்கான டிக்கெட்டும்தான்.
விரைவில் மீண்டு வரட்டும் ஆப்கானிஸ்தான், விளையாட காத்திருக்கிறோம்!