(Source: ECI/ABP News/ABP Majha)
பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னணி வீராங்கனை நயோமி ஒசாகா ஏன் விலகினார்? தெரிஞ்சா அசந்து போவீங்க!
பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரிலிருந்து ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா விலகியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் மிகவும் முக்கியமான ஒன்றான பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது பாரிஸில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டிகளிலிருந்து உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை நயோமி ஒசாகா திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தப் போட்டிகளில் முதல் சுற்றில் அவர் ரூமேனியா நாட்டு வீராங்கனையை தோற்கடித்திருந்தார். இந்தச் சூழலில் இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு முன்பாக அவர் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "நான் எப்போதும் டென்னிஸ் போட்டிகளின் களத்திலிருந்து வெளியே இருக்கும் கவனத்தை திருப்பும் நபராக இருக்க விரும்பியதில்லை. நான் சில நாட்களுக்கு முன்பாக செய்திருந்த பதிவு இவ்வளவு பெரிதாகும் என்று நினைத்து பார்க்கவில்லை. எனவே வீரர்கள் மற்றும் அனைவரின் நலனை கருதி நான் இந்தத் தொடரிலிருந்து விலகுகிறேன். நான் தற்போது மன அழுத்தத்தில் இருப்பதால் தான் போட்டிகளுக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்வில்லை என்ற முடிவை எடுத்தேன். அது இவ்வளவு பெரிய விஷயமாகும் என்று நினைக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
— NaomiOsaka大坂なおみ (@naomiosaka) May 31, 2021
முன்னதாக பிரஞ்சு ஓபன் தொடருக்கு முன்பாக ஒசாகா செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க மாட்டேன் என்ற முடிவை அறிவித்திருந்தார். அதற்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அமைப்பு ஒசாகாவிற்கு விதிமுறைகளை மீறியதாக அபராதம் விதித்தது. அத்துடன் தொடர்ந்து இதை செய்தால் கிராண்ட்ஸ்லாம் தொடரிலிருந்து நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவித்திருந்தது. இது பெரும் பேசுப் பொருளாக அமைந்தது. இந்தச் சூழலில் அவர் பிரஞ்சு ஓபன் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
டென்னிஸ் உலகில் மிகவும் முக்கியமான வீராங்கனைகளில் ஒருவராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒசாகா இருந்து வருகிறார். அவர் முதல் முறையாக 2018ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் தொடரை கைப்பற்றி அசத்தினார். அப்போது இளம் வயது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். அதன்பின்னர் டென்னிஸ் போட்டிகளில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேவும் தனது கருத்துகளை ஆழமாக தெரியும் படி பல நடவடிக்கைகள் ஈடுபட்டார்.
குறிப்பாக 2020ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் தொடர் முழுவதும் அவர் தனது செயல் மூலம் உலகத்திற்கு ஒன்றை உணர்த்தினார். அந்த யுஎஸ் ஓபன் தொடரில் நயோமி ஒசாகா 7 முக கவசங்களை பயன்படுத்தினார். அந்த எழு முக கவசங்களிலும் இனவெறி தாக்குதலுக்கு பலியான பெரோனா டெய்லர், ஜார்ஜ் ஃபிளையாட் உள்ளிட்டவர்களின் பெயர்களை அதில் பதித்திருந்தார். மேலும் யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்ற பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட்டின் ஜெர்ஸியை அணிந்திருந்தார். இதன் மூலம் இளம் வயது வீராங்கனையாக இருந்தாலும் தன்னுடைய மனதிற்கு பட்டத்தை துணிச்சலாக வெளியே பதிவு செய்து வந்தார்.
You get the feeling that @naomiosaka is one of those once in a lifetime athletes who will change the game!!! #champion #USOpen #gamechanger
— Mahesh Bhupathi (@Maheshbhupathi) September 12, 2020
2020ஆம் ஆண்டு யுஎஸ் ஓபன் தொடரை ஒசாகா வென்றவுடன் இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி தனது ட்விட்டர் பக்கத்தில் நயோமி குறித்து பதிவை இட்டிருந்தார். அதில், “வாழ்நாளில் ஒருமுறை தோன்றும் வீராங்கனை நயோமி ஒசாகா. அவர் டென்னிஸ் விளையாட்டை மாற்றி அமைக்கப் போகும் வீராங்கனை” எனப் பதிவிட்டிருந்தார். அதன்பின்னர் இந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி நயோமி ஒசாகா அசத்தினார்.
இந்தச் சூழலில் தற்போது பிரஞ்சு ஓபன் தொடரிலிருந்து பாதியில் விலகினாலும் தன்னுடைய கருத்தை ஆழமாக மீண்டும் பதியவைத்துள்ளார். இதுதொடர்பாக அவர்,"இந்த கிராண்ட்ஸ்லாம் விதிகள் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாக உள்ளது.இதை மாற்றி வீரர் வீராங்கனைகள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ஆசிய சாம்பியன்ஷிப் தங்க மங்கை பூஜா ராணி! காயங்களை கடந்து மகுடம் சூட்டிய மகாராணி!