Mohammed Shami: ”பிரதமர் மோடி ஆறுதல் கூறியது நம்பிக்கை அளித்தது” - முகமது ஷமி!
பிரதமர் நரேந்திர மோடி எங்களை சந்தித்து ஆறுதல் கூறியது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதன்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியது.
மனம் உடைந்த வீரர்கள்:
இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முன்னதாக இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் இந்திய அணி வீரர்கள் மனம் உடைந்தனர். பின்னர், ஓய்வு அறையில் இருந்த இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி கட்டி அணைத்து தட்டிக்கொடுத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனிடையே, இன்று (நவம்பர் 23) தனது சொந்த மாநிலாமான உத்தரப்பிரதேசத்திற்கு சென்றார் முகமது ஷமி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் போதுமான ரன்கள் எடுக்காதது தான் தோல்விக்கு காரணம். நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்தால், அந்த ரன்னுக்குள் ஆஸ்திரேலியாவை எளிதாக கட்டுப்படித்தியிருப்போம்” என்று கூறினார்.
அப்போது அவருடைய சொந்த கிராமத்தில் மைதானம் அமைக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முகமது ஷமி, “ எனது கிராமத்தில் மைதானம் கட்ட நடவடிக்கை எடுத்த உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் திறமையான ஏராளமான இளைஞர்கள் பெற்றுள்ளோம். நம்முடைய பகுதியில் சிறந்த மைதானம், அகாடமி உருவாவது, முக்கியமானது. இளைஞர்கள் விளையாட்டை பற்றி அதிக அளவில் கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.
மோடியின் ஆறுதல் நம்பிக்கை:
பின்னர், ஓய்வு அறையில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக வந்து ஆறுதல் கூறியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முகமது ஷமி, “இது போன்ற செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது (வீரர்களை மோடி சந்தித்தது) . எங்களை பிரதமர் நரேந்திர மோடி ஓய்வு அறைக்கு வந்து ஆறுதல் கூறியது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. ஏனென்றால் மனதளவில் நாங்கள் நொறுங்கி விட்டோம். இது போன்ற தருணத்தில் பிரதமர் வந்து ஆறுதல் கூறியது உண்மையிலேயே வித்தியாசமானதாக இருந்தது”என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி கடந்த நவம்பர் 19 ஆம் தேதி இந்திய அணியின் தோல்விக்கு பிறகு வீரர்களை சந்தித்த வீடியோ வெளியானது. அதில், “'நீங்க எல்லாரும் மொத்தமா 10 ஆட்டங்களையும் ஜெயிச்சு வந்துருக்கீங்க. விடுங்க தம்பிகளா, நாடே உங்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறது. கவலைப்படாதீங்க. நீங்கள் எல்லாரும் சிறப்பாக முயற்சி செய்தீர்கள்.
விடுங்க பார்த்துக்கலாம். இதுபோல நடக்கும், சிரித்துக் கொண்டே இருங்கள். எல்லாரும் ஒன்றாக முன்னேறி செல்லுங்கள். இந்த நேரத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் பலமாக இருக்க வேண்டும். நாடு உங்களை எதிர்நோக்கி இருக்கிறது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.