விராட் கோலி ஒருநாள் கேப்டன் பதவிக்கும் ஆபத்து! பேட்ஸ்மேன் கோலியை விரும்புகிறதா பிசிசிஐ?
துபாயில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது வரை இந்திய அணியின் டெஸ்ட், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக நீடித்து வரும் அவர், துபாயில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் துபாயில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பை கோலி வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதன் மூலம் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, துணை கேப்டன் ரோகித் சர்மா, பிசிசிஐ தலைவர் கங்குலி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆகியோரிடம் ஆலோசனை செய்த பிறகே இந்த முடிவை எடுத்திருப்பதாக விராட் கோலி அறிவித்தார். அதேநேரம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் கேப்டனாக நீடிக்க விராட் கோலி மறுக்கவில்லை.
இது குறித்த தகவல்கள் ஏற்கனவே கசிந்த உடனே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அதனை மறுத்தார். ஆனால், அவரை ஆலோசித்த பிறகே இந்த முடிவை எடுத்ததாக கோலி தெரிவித்தது இந்திய அணியில் இருக்கும் குழப்பத்தை தெளிவாக காட்டி இருக்கிறது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டு உள்ள விளக்கத்திலும் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பு குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. 2023 உலகக்கோப்பை வரை அவர் ஒருநாள் அணி கேப்டனாக நீடிப்பார் என வாக்குறுதி அளிக்கப்படவில்லை. இந்தியா டெஸ்ட்டில் சிறந்த அணியாக விளங்கினாலும், அதில் கேப்டன் கோலியின் செயல்பாடுகள் மோசமாகவே இருந்தன. அஸ்வினை அணியில் சேர்க்காதது, வீரர்களுடன் நல்ல உறவை பேணவில்லை என கோலி மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
அடுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 2 ஆண்டுகளே மீதம் உள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் விராட் கோலி நீடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. துபாயில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி சிறப்பாக செயல்படாவிட்டால் அதிலிருந்தும் அவர் நீக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் எழ தொடங்கி இருக்கின்றன.
பிசிசிஐயும் கேப்டன் கோலியை விட பேட்ஸ்மேன் கோலியையே அதிகம் விரும்புவதாகவும், கேப்டன் சுமையை இறக்கிவைத்து அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி பழைய கோலியாக விளையாடினால் இந்திய அணிக்கு பயனளிக்கும் என நம்புவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்ததாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.