Paralympics Medal Winners: பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை பெற்ற பதக்கங்கள் - ஒரு ரீவைண்ட்..!
சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டுக்களையும் இணைத்து ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது போல, மாற்றுத்திறனாளிகளுக்காக பாராலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது.
முரளிகாந்த் பெட்கர்
இந்தியாவிற்காக அபினவ் பிந்த்ரா 2008ம் ஆண்டு துப்பாக்கி சுடுதலில் தங்கம் வெல்வதற்கு முன்பாகவே, 1972ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர் முரளிகாந்த் பெட்கர். ஜெர்மனியில் நடைபெற்ற அந்த பாராலிம்பிக்கில் அவர், 50 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார்.
மேலும், அந்த பாராலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிதல், பனிச்சறுக்கு ஆகிய போட்டிகளிலும் பங்கேற்று இறுதிப்போட்டி வரை முன்னேறினார். அவரது சாதனையை பாராட்டி 2018ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பீமராவ் கேசர்கார்
1984ம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஜோகிந்தர் சிங் பேடி
இந்தியாவிற்காக பாராலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியில் 1984ம் ஆண்டு பங்கேற்றவர் ஜோகிந்தர் சிங் பேடி. அவர், அந்த போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அதுமட்டுமின்றி, அவர் அதே பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதல் போட்டியிலும், ஈட்டி எறிதல் போட்டியிலும் வெண்கலப்பதக்கத்தை வென்றார். ஒரே பாராலிம்பிக்கில் இந்தியாவிற்காக மூன்று பதக்கங்களை வென்றவர் ஜோகிந்தர் சிங் பேடி மட்டுமே என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரர்.
ராஜூந்தர் சிங் ரஹேலு
2004ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற ஆண்கள் 56 கிலோ கிராம் எடைப்பிரிவிலான பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தேவேந்திர ஜஜ்ஹாரியா
இந்தியாவின் வெற்றிகரமான பாராலிம்பிக் வீரர் யாரென்றால் அவர் தேவேந்திர ஜஜ்ஹாரியாவே. அவர் 2004ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியிலும், 2016ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியிலும் இந்தியாவிற்காக ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ளார். தற்போது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியிலும் இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல களமிறங்கியுள்ளார்.
கிரிஷா நாகராஜேகவுடா
2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
தங்கவேலு மாரியப்பன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் உயரம் தாண்டுதல் வீரர். 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்.
அவர், இந்த முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று உள்ளார். அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
தீபா மாலிக்
இந்தியாவிற்காக பாராலிம்பிக்கில் பங்கேற்ற மிகவும் வயதான பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தீபா மாலிக் தனது 45வது வயதில் ரியோவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற அவர், இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். சக்கர நாற்காலியிலே அமர்ந்து நாட்டிற்காக வெள்ளிப்பதக்கத்தை வென்ற தீபா மாலிக் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
வருண்சிங்பாதி
2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிராவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இந்தியா மொத்தமாக பாராலிம்பிக் போட்டியில் 4 தங்கங்களையும், 4 வெள்ளிகளையும், 4 வெண்கலங்கள் என்று 12 பதக்கங்களை வென்றுள்ளது.