Roger Federer | டேபிள் டென்னிஸில் அசரடித்த ஃபெடரர் - வைரல் வீடியோ !
பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் டேபிள் டென்னிஸ் விளையாடும் வீடியோ வைரலாகியுள்ளது.
டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர். இவர் 2020ஆம் ஆண்டு முதல் இரண்டு முறை காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதனால் பல டென்னிஸ் தொடர்களிலிருந்து விலகியுள்ளார். கடைசியாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஃபெடரர் பங்கேற்றார். அதன்பின்னர் டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஒய்வில் உள்ள ரோஜர் ஃபெடரர் தன்னுடைய வீட்டில் டேபிள் டென்னிஸ் விளையாடியுள்ளார். இதை ஒரு வீடியோவாக எடுத்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,”என்னுடைய நண்பர்களுடன் டேபிள் டென்னிஸ் விளையாடுகிறேன்” என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோவை தற்போது வரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலர் ரோஜர் ஃபெடரர் டென்னிஸை போல் இதையும் சிறப்பாக விளையாடுகிறார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் ரோஜர் ஃபெடரர் பங்கேற்போகிறாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
2021ஆம் ஆண்டு இதுவரை ரோஜர் ஃபெடரர் 13 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று உள்ளார். காயம் காரணமாக அவர் கிராண்டஸ்லாம் தொடர்களை தேர்ந்தெடுத்து விளையாடி வருகிறார். இது தொடர்பாக அவர், "விம்பிள்டன் தொடருக்கு பிறகு நான் பெரிதாக டென்னிஸ் போட்டிகள் மற்றும் பயிற்சியில் களமிறங்கவில்லை. நான் தற்போது ஓய்வு எடுத்து வருகிறேன். அடுத்த வாரம் என்னுடைய மருத்துவர்களை சந்திக்க உள்ளேன். அதன்பின்பு தான் என்னுடைய அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியும்" எனக் கூறியுள்ளார். கடந்த 8ஆம் தேதி ரோஜர் ஃபெடரர் தன்னுடைய 40ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
மேலும் படிக்க: அறிமுக போட்டியிலேயே அடித்து துவம்சம் செய்த முகமது அலியின் பேரன்!