Tamil thalaivas vs haryana steelers: ஹரியானா ஸ்டீலர்ஸை பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Tamil thalaivas vs haryana steelers: வெற்றி முனைப்புடன் ஹரியான ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி.
ப்ரோ கபடி:
10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இதில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான போட்டியில், 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக்கணக்கை தொடங்கியது தமிழ் தலைவாஸ் அணி.
அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணியின் நட்சத்திர ரெய்டர் பர்தீப் நார்வாலை சுமார் எட்டு முறை தடுப்பாட்டம் மூலம் அவுட் செய்து அசத்தி இருந்தது தமிழ் தலைவாஸ் அணி. மேலும், தமிழ் தலைவாஸ் அணியின் முக்கிய ரெய்டரான நரேந்தர் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை அள்ளினார். அந்த வகையில் உ.பி.யோத்தாஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் 11 ரெய்டுகள் சென்ற அவர் 3 போனஸ் புள்ளிகளுடன் 14 புள்ளிகளை பெற்று அசத்தி இருந்தார்.
அதேபோல், சாகர் 6 டேக்கில் மற்றும் ஷாஹில் சிங் 5 டேக்கில் என எடுத்து அசத்தினார்கள். அஜங்யா பவர் 4 ரெய்டுகள் சென்று 6 புள்ளிகளை பெற்றார். இதன் மூலம்தான் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி கணக்கை தொடங்க முடிந்தது. இதனிடையே, 11 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 8 போட்டிகளில் தோல்வி பெற்றிருந்தாலும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 19 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
பழி தீர்க்குமா தமிழ் தலைவாஸ்?
தமிழ் தலைவாஸ் அணியின் இந்த வெற்றியின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி கணக்கை தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி இன்று ஜனவரி 14 ஆம் தேதி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர் கொள்கிறது.
முன்னதாக, இதுவரை 11 போட்டிகள் விளையாடியுள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. அந்த வகையில் 34 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் இருக்கிறது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியில் டேக்கில் புள்ளிகளை பெறுவதில் ஜெய்தீப் வழுவாக இருக்கிறார். அதேபோல், ரெய்டர் வினய் மற்றும் சித்தார்த் தேசாய் ஆகியோர் அந்த அணியில் வலுவாக இருக்கின்றனர். இதனிடையே, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக தாங்கள் விளையாடிய கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கும் தமிழ் தலைவாஸ் இன்றைய போட்டியில் பழிக்குபழி தீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் படிக்க: Yuvraj Singh: இந்தியாவுக்கு திறமை இருக்கு; ஆனாலும் தோல்வி ஏன்? - ஆலோசகராக விரும்பும் யுவராஜ் சிங்!
மேலும் படிக்க: Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி... அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!