Tamil Thalaivas Head Coach: ’ரசிகர்களுக்காக இன்னும் நிறையவே செய்ய விருப்பம்’.. தமிழ் தலைவாஸ் தலைமை பயிற்சியாளர் அஷன் குமார்!
வருகின்ற போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை இன்னும் நிறையவே வெளிப்படுத்த காத்திருக்கிறோம் என தமிழ் தலைவாஸ் அணி தலைமை பயிற்சியாளர் அஷன் குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் இன்று தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தலைவாஸ் அணி தங்களது சொந்த மைதானமான சென்னையில் விளையாட உள்ளதால், மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்கும்.
பாட்னா பைரேட்ஸ் அணிக்கு பிறகான இன்றைய ஆட்டத்திற்கு பிறகு, தமிழ் தலைவாஸ் அணி வருகின்ற டிசம்பர் 27ம் தேதி வரை 3 போட்டிகளில் சென்னையில் விளையாட உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனையும் தற்போது ஆன்லைனில் சக்கைபோடு போட்டு வருகிறது.
கடந்த சீசனின் அரையிறுதி வரை சென்று கெத்துகாட்டிய தமிழ் தலைவாஸ் அணி, இந்தாண்டு தலைமை பயிற்சியாளர் அஷன் குமார் பயிற்சியின்கீழ் எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளது.
இந்தநிலையில், வருகின்ற போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை இன்னும் நிறையவே வெளிப்படுத்த காத்திருக்கிறோம் என தமிழ் தலைவாஸ் அணி தலைமை பயிற்சியாளர் அஷன் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “ வெற்றி பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்களிடம் நிறைய ஆர்வமுள்ள இளம் வீரர்கள் உள்ளனர். எங்களது சொந்த மைதானத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திரும்புவது மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இங்குள்ள எங்களது ரசிகர்களின் ஆற்றலும், ஆதரவும் ஈடு இணையற்றது.
இத்தகைய நம்பமுடியாத சூழலுக்கு மத்தியில் நாங்கள் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் கடினமாக பயிற்சி செய்துள்ளோம், எங்களால் சிறந்ததை வழங்க தயாராக உள்ளோம். ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். இதன்மூலம் வருகின்ற போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை இன்னும் நிறையவே வெளிப்படுத்த காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், நேற்று தமிழ் தலைவாஸ் பக்கத்தில் தலைமை பயிற்சியாளர் அஷன் குமார் உடற்பயிற்சி செய்துகொண்டு ‘ நாங்க ஆட்டத்திற்கு ரெடி, நீங்க ரெடியா..?’ என கேட்ட வீடியோவை பதிவிட்டு இருந்தனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 11 இடத்தில் உள்ளது.
சென்னையில் தமிழ் தலைவாஸ் அணியின் அடுத்தடுத்த போட்டிகள்:
இன்று (டிசம்பர் 22) முதல் டிசம்பர் 27ம் தேதி வரை தமிழ் தலைவாஸ் அணி 4 போட்டிகளில் சென்னையில் விளையாடவுள்ளது. அவற்றின் முழு விவரம் பின்வருமாறு...
- டிசம்பர் 22: தமிழ் தலைவாஸ் vs பாட்னா பைரேட்ஸ் – SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
- டிசம்பர் 23: தமிழ் தலைவாஸ் vs ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
- டிசம்பர் 25: தமிழ் தலைவாஸ் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் – SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.
- டிசம்பர் 27: தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் – SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், சென்னை.