நம்புங்க... ஆஸி., செல்கிறது ஆப்கான் அணி: கிரிக்கெட்டிற்கு பச்சைக்கொடி காட்டிய தலிபான்!
நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் பங்கேற்க உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் ஆட்சி பொறுப்பை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ஆப்கான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக தலிபான் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி, ஹமீது ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் பங்கேற்க உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அடுத்தடுத்து கிடைக்கும் தகவல்கள், மனதை பதைபதைக்க வைக்கின்றது. பெண்கள், குழந்தைகள், சுதந்தரம், பொருளாதாரம் என ஒவ்வொன்றும் நிலை அறியாது கைவிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் விளையாட்டு துறையும் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
எனினும், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது, ”ஆட்சி மாற்றத்தால் கிரிக்கெட் செயல்பாடுகள் ஏதும் பாதிக்கப்படுவதாக நாங்கள் கருதவில்லை. தலிபான்கள் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள். எங்களது தொடக்க காலத்தில் இருந்தே தலிபான்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அவர்கள் எங்களது செயல்பாடுகளில் இடையூறு செய்ததில்லை” என ஹமீது ஷின்வாரி தெரிவித்திருந்தார்.
#BREAKING Taliban approve Afghanistan's first Test match since takeover: cricket board #AFPSports pic.twitter.com/UE7dpAo0LF
— AFP News Agency (@AFP) September 1, 2021
உலகின் மிகவும் இளமையான கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக வலம் வருகிறது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. கடந்த 2009-ஆம் ஆண்டுதான் ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன் முறையாக அறிமுகமாகியது. தங்களது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை இந்தியாவிற்கு எதிராக சென்னையில் கடந்த 2018-ஆம் ஆண்டு விளையாடினர்.
உலகின் மிகவும் இளம் கிரிக்கெட் அணியாக இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளையே தங்களது சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் பல முறை கதிகலங்க வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ளது. 129 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 62 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 63 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 1 போட்டி டையில் முடிந்துள்ளது. 14 டி20 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.