T20 Worldcup 2021: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் அறிமுகம்? யார் அனுபவம்?
டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இளமையும், அனுபவமும் கலந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 24-ந் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். போட்டிகள் நிறைவு பெற்று இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கியுள்ளது. இந்திய அணி வரும் 24-ந் தேதி பரமவைரியான பாகிஸ்தானுடன் மோத உள்ளது.
இந்த நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அனுபவமும், இளமையும் கலந்த கலவையாகவே தேர்வு செய்ப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலியின் தலைமையின் கீழ் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்குமார், முகமது ஷமி ஆகியோர் ஆட உள்ளனர். ரிசர்வ்ட் ப்ளேயர் ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த உலகக் கோப்பையில் ஆடும் இந்திய அணியில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், கே.எல்.ராகுல், ராகுல் சாஹர், அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்குமார் ஆகியோருக்கு இதுவே முதல் டி20 உலககோப்பை ஆகும். ரிசர்வ்ட் ப்ளேயர்கள் பட்டியலில் உள்ள ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கும் இந்த உலகக் கோப்பையை முதல் டி20 உலகக்கோப்பை ஆகும்.
தற்போது அணியில் இடம்பெற்றுள்ளவர்களில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் மட்டுமே ஏற்கனவே டி20 உலகக் கோப்பையில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் 2016ம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணிக்காக ஆடியவர்கள்.
இந்திய வீரர்கள் பலரும் முதல் உலகக் கோப்பையில் ஆடும் அனுபவம் கொண்டவர்கள் என்றாலும், அவர்கள் அனைவரும் ஐ.பி.எல். போட்டிகளில் ஏராளமான டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். குறிப்பாக, நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் தற்போது உலககோப்பை நடைபெறும் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் ஆடி நன்கு பயிற்சி பெற்றுள்ளனர். இதனால், உலகக் கோப்பையில் இந்த இளம் வீரர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கிரிக்கெட் நிபணர்களும், ரசிகர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்