Praggnanandhaa : கெத்துகாட்டும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா! நார்வே செஸ் ஓப்பனை தோல்வியே இல்லாமல் வென்று சாதனை!
பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தையும், 2-வது இடத்தை இஸ்ரேல் வீரர் ஐஎம் மார்செல் ப்ரோம்ஸ்கியும், 3-வது இடத்தை ஸ்வீடன் வீரர் ஜங் மின் சியோவும் பெற்றனர்.
நார்வேயில் நடந்த குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரும் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
செஸ் விளையாட்டில் ஆனந்த் என்ற தமிழர் முத்திரை பதிக்க, அதே தமிழ் நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா தனது அபார செஸ் திறமையை வெளிக்கொண்டு வந்து, தன்னை சிறு வயதிலேயே நிரூபித்துக் கொண்டுள்ளார். சமீபகாலமாக பிரக்ஞானந்தா ஆட்டம் பிரமாதமாக இருந்து வருகிறது. செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைனில் சமீபத்தில் உலகச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸனை பிரக்ஞானந்தா வீழ்த்தியது பெரிய விஷயமாக பார்க்கப் பட்டது. ஆனால் இறுதிச்சுற்றில் சீனவீரர் டிங் லிரனிடம் வீழ்ந்தார். ஆனால் நார்வே ஓபன் செஸ் போட்டியில் வென்று தன்னை மீண்டும் நிரூபித்து உள்ளார்.
நார்வே ஓபன் செஸ் போட்டி
9 சுற்றுகள் ஆடிய பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று வெற்றியாளராக வலம்வந்தார். 9 சுற்றுக்களிலும் பிரக்ஞானந்தாவை எந்த வீரராலும் தோற்கடிக்க முடியாத வெற்றியாளராகவே இருந்தார். வெள்ளிக்கிழமை நடந்த கடைசிச் சுற்றில் மற்றொரு இந்திய வீரர் வி.பிரணீத்தை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
புள்ளி பட்டியல்
பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகளுடன் முதலிடத்தையும், 2-வது இடத்தை இஸ்ரேல் வீரர் ஐஎம் மார்செல் ப்ரோம்ஸ்கியும், 3-வது இடத்தை ஸ்வீடன் வீரர் ஜங் மின் சியோவும் பெற்றனர். இந்திய வீரர் பிரணீத் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடம் வந்தபோதிலும் டைபிரேக்கரில் ஸ்கோர் செய்யாததால் 6-வது இடம் சென்றார்.
யார்யாரை வென்றார்?
இந்தப் போட்டியில் பிரணீத்தைத் தவிர்த்து, பிரக்ஞானந்தா, 8-வது சுற்றில் விக்டர் மிக்ஹால்வ்ஸ்கி, 6வது சுற்றில் விடாலி குகின், 4-வது சுற்றில் முகம்மதுஜோகித் சுயராவ், 2-வது சுற்றில் சிமென் முட்சோவ், முதல் சுற்றில் மத்தியாஸ் உன்னேலேண்ட் ஆகியோரை வீழ்த்தினார். 3 போட்டிகளை பிரக்ஞானந்தா டிரா செய்தார்.
பயிற்சியாளர்
பிரக்ஞானந்தா பயிற்சியாளர் ஆர்பி ரமேஷ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “ பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றதற்கு வாழ்த்துகள். முதல்நிலை வீரரான பிரக்ஞானந்தா பட்டம் வெல்வதில் வியப்பு எதுவும் இல்லை. பொதுவாகவே பிரக்ஞானந்தா நன்றாக விளையாடுவார், 3போட்டிகளை டிரா செய்துள்ளார். அவரின் வெற்றி மேலும் ஊக்கத்தை அளி்க்கும்” எனத் தெரிவித்தார்
ஒலிம்பியாட்
சென்னையில் அடுத்த மாதம் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணியில் பிரக்ஞானந்தா விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது. உலகெங்கும் சென்று வென்று வரும், தமிழக செஸ் மாஸ்டருக்கு உள்ளூரில் ஒரு டைட்டில் கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்