Paris 2024: உலக விளையாட்டுகளில் முதல்முறை! பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தடகள வீரர்கள்: இத்தனை லட்சம் பரிசா..?
வருகின்ற ஜூலை மாதம் தொடங்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வெல்வோருக்கு ரூ. 41.60 லட்சம் பரிசாக வழங்கப்படும் என உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டில் முதன்முறையாக, இந்த ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக்கில் 48 தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா 50, 000 அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ. 41.60 லட்சம்) வழங்கப்படும் என உலக தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும், 4 பேர் கொண்ட தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறுவோருக்கு இந்த தொகை பகிர்ந்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு:
வருகின்ற ஜூலை மாதம் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கிறது. கடந்த 2021ம் ஆண்டு டோக்கியாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு தனிநபர் பிரிவில் தங்கப் தக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.
View this post on Instagram
இதையடுத்து, கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை போன்று, இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கிலும் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முதல் கூட்டமைப்பு:
இந்த வரலாற்று முடிவின் ஒலிம்பிக் போட்டிகளில் பரிசுத் தொகையை வழங்கும் முதல் சர்வதேச கூட்டமைப்பு என்ற பெருமையை உலக தடகள சம்மேளனம் பெறுகிறது. இதுகுறித்து உலக தடகள தலைவர் செபாஸ்டியன் கோ பேசுகையில், “ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை அறிமுகப்படுத்தப்படுவது சர்வதேச அமைப்புக்கும், ஒட்டுமொத்த தடகள விளையாட்டுக்கும் ஒரு முக்கியமான தருணம். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வருவாய் ஒதுக்கீட்டில் இருந்து மொத்தம் 2.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 18.63 பில்லியன்) விருதுக்காக வழங்கப்படும். இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம், 48 தடகள விளையாட்டுகளில் தங்கம் வெல்லும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கு 50, 000 டாலர் தொகையை வழங்க இது பயன்படுத்தப்படும்” என்றார்.
மேலும், உலக தடகளத்தின் இந்த முன்முயற்சி வருகின்ற 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு நீட்டிக்கப்படுவதற்கான முயற்சியாக இருக்கும்” என்றும் தெரிவித்தார்.