Will you Marry me! பார்வையற்ற வீராங்கனைக்கு காதல் PROPOSE செய்த வழிகாட்டி; பாராலிம்பிக் மைதானத்தில் பரவசம்!
ஓடுதளத்தில் கேலேவின் கைப்பிடித்து அழைத்துச் சென்ற மேனுவல், வாழ்நாள் முழுவதும் கரம்பிடித்து அழைத்துச் செல்ல விரும்பி காதலை தெரிவித்தார்.
உலக விளையாட்டுப் பிரியர்களுக்கு ஒலிம்பிக் என்றாலே ஒரு பிரம்மிப்பூட்டும் நிகழ்வாக இருக்கும். ஆனால், ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த பிறகு நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள், ஒலிம்பிக்கை விட கூடுதல் பிரமிப்பையும் காண்போர் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையையும் தரக்கூடியது.
காரணம், இதில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் பல்வேறு வலிகளையும் வேதனைகளையும் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் தொடர் முயற்சியையும் கடந்து இந்த நிலையை அடைந்து இருக்கின்றனர். உடலில் ஏதாவது குறை என்றாலே வாழ்க்கை பாழாகிவிட்டதுபோல் பார்த்து பரிதாபப்படும் சமூகத்தில், அத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க முடியும் என தடைகளை தகர்த்து எரிந்து ஒரு அடி எடுத்து வைக்கும்போது அவன் வீரனாகி விடுகிறான்.
இப்படித்தான் சேலத்தில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கத்தையும், வெள்ளியையும் வாங்கிக் கொடுத்தார் மாரியப்பன் தங்கவேலு. மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வுகளை கடத்தும் பாராலிம்பிக் தொடரில் மற்றுமொரு புல்லரிக்க வைக்கும் காதல் சம்பவம் நடந்துள்ளது.
டோக்கியோ பாராலிம்பிக்கில் பார்வையற்ற மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் பார்வையற்ற வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டி இருப்பார். இன்று நடைபெற்ற அரையிறுதிக்கு முந்தைய சுற்றில் கேப் வெர்ட் நாட்டை சேர்ந்த கேலே நிட்ரியா என்ற 32 வயது வீராங்கனைக்கு மேனுவல் அண்டோனியோ என்பவர் வழிகாட்டியாக இருந்து உள்ளார். கேலே நிட்ரியா ஓடுதளத்தில் ஓடும்போது கைப்பிடித்து அழைத்துச் செல்வது மேனுவல் அண்டோனியோவின் பணி.
இதில் வீராங்கனை கேலே நிட்ரியா, வழிகாட்டி மேனுவல் அண்டோனியோ துணையுடன் 4 வது இடத்தை பிடித்தார். ஒரு இடத்தில் அரையிறுதிச் சுற்று வாய்ப்பை தவறவிட்டு விட்டோமே என்ற வருந்திய கேலேவுக்கு மறுநொடியே இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் வழிகாட்டி மேனுவல்.
ஓடுதளத்தில் கேலேவின் கைப்பிடித்து அழைத்துச் சென்ற மேனுவல், வாழ்நாள் முழுவதும் கரம்பிடித்து அழைத்துச் செல்ல விரும்பி காதலை தெரிவித்தார். ஓடுதளத்தில் போட்டியாளர்கள் சூழ ஸ்டைலாக ரொமாண்டிக் ஹீரோ போல முட்டிப்போட்டு மோதிரத்தை மேனுவல் அணிவித்தபோது சொல்ல வார்த்தைகள் இன்றி உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீருடன் கட்டி அணைந்தார் வீராங்கணை கேலே. இந்த அழகிய காதல் காட்சியை கண்டு அங்கிருந்த அனைவரும் உணர்ச்சிப் பெருக்குடன் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
#Paralympics proposal alert 🥺
— Paralympic Games (@Paralympics) September 2, 2021
Manuel Antonio Vaz da Veiga, guide to Keula Nidreia Pereira Semedo, popped the question after the women's T11 200m heats
May the two of them run together for life! ❤️#Tokyo2020 #ParaAthletics pic.twitter.com/BYfWVwtwYm
போர்சுகலில் வசித்து வரும் இருக்கும் கேலே, தான் பிறந்தநாடான கேப் வெர்டுக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். அவரது ஆசிரியர் அளித்த ஊக்கம் காரணமாக பார்வையின்மையை ஒரு பொருட்டாக கருதாமல் அவரை வாழ்க்கையில் வீரநடைப் போட்டு முன்னேறி இருக்கிறார். கேலே தனது சுயவிபரக்குறிப்பில் மேனுவலை வழிகாட்டி என்று குறிப்பிட்டு இருந்தார். இப்போது கணவராக மாறப்போகிறார்.
போட்டியில் வெற்றிபெறாவிட்டாலும் வாழ்கையில் வெற்றிபெற்ற உணர்வை இதன்மூலம் அடைந்திருப்பார் கேலே. போட்டிகளில் ஒன்றாக ஓடிய இருவரும் வாழ்க்கை முழுவதும் சேர்ந்து ஓடப்போகின்றனர் என்ற இந்த வரியை எழுதுகையில் நமக்கே உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.