Olympics 2024: ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்கமகன்கள்! காலத்திற்கும் புகழ்பெற்ற கதாநாயகர்கள்!
உலகின் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் இரண்டு பேர் மட்டுமே தங்கம் வென்றுள்ளனர்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கும் கொண்டாட்டமான திருவிழாவாக கருதப்படுகிறது பாரீஸ் ஒலிம்பிக். ஒலிம்பிக்கை பொறுத்தவரை அமெரிக்காவும், சீனாவுமே ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக இருந்து வருகிறது.
மக்கள் தொகையில் சீனாவிற்கு அடுத்தபடியாக உள்ள இந்தியா ஒலிம்பிக் தொடரில் தனி நபர் தங்கப்பதக்கத்தை வெல்வது மிகவும் சவாலாகவே இருந்து வருகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணிக்காக இதுவரை இரண்டு பேர் மட்டுமே தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர். அபினவ் பிந்த்ரா மற்றும் நீரஜ் சோப்ரா மட்டுமே இந்தியாவிற்காக இதுவரை தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.
அபினவ் பிந்த்ரா:
இந்திய அணிக்காக தனிநபர் யாருமே ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவில்லை என்று நீண்ட ஆண்டுகளாக ஏங்கி வந்த இந்த தேசத்தின் ஏக்கத்தை நீக்கியவர் அபினவ் பிந்த்ரா. உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் பிறந்தவர். சிறுவயது முதலே துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆர்வம் கொண்டவராக அவர் இருந்தார். இதையடுத்து, அவர் துப்பாக்கிச்சுடுதலுக்கு முறைப்படி பயிற்சி மேற்கொண்டார்.
இந்தியாவிற்காக 2000ம் ஆண்டு ஒலிம்பிக்கில் முதன்முறையாக அறிமுகமான அபினவ் பிந்த்ரா, 2004ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தா சூழலில் 2008ம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார். இந்தியாவிற்காக முதன்முறையாக தங்கம் வென்றவர் என்று வரலாறு படைத்துள்ளார்.
நீரஜ் சோப்ரா:
2008ம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்ற பிறகு இந்தியாவிற்காக யாருமே தங்கப்பதக்கம் வெல்லவில்லை என்ற ஏக்கத்தை, கடந்த ஒலிம்பிக்கில் நீக்கியவர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதலில் வெளிநாட்டினரே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், முதன்முறையாக யாருமே எதிர்பாராத வகையில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை வென்று தந்தவர் நீரஜ்சோப்ரா. கடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்று தங்கமகனாக, நாட்டுக்காக ஒலிம்பிக்கின் தலைமகனாக நாடு திரும்பினார் நீரஜ் சோப்ரா.
இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் இதுவரை தங்கப்பதக்கம் வென்று தந்த இவர்கள் இருவரையும் எப்போதும் இந்திய விளையாட்டு வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ளது என்பது மறுக்க முடியாதது.
மேலும் படிக்க:Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா! இந்தியாவிற்காக பங்கேற்கும் தடகள வீரர், வீராங்கனைகள் யார்? யார்? முழு விவரம்
மேலும் படிக்க: Olympics 2024 New Sports: இது புதுசா இருக்கே.. பாரீஸ் ஒலிம்பிக்கில் புதிதாய் இணைந்துள்ள போட்டிகள்! முழு லிஸ்ட் இதோ!