Vinesh Phogat: வினேஷ் போகத் வழக்கில் வெளியாக உள்ள தீர்ப்பு; வெள்ளி பதக்கம் கிடைக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார். இதில் இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அதன்படி இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையை எதிர்கொள்ள தயாராக இருந்தார். இதனிடையே பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்தி கூறி வந்த சூழலில் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி ஒன்று வந்தது.
அதாவது வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மல்யுத்த விதிகளின் படி 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்பவர்கள் அந்த எடையை விட கூடுதல் எடையில் இருக்கக் கூடாது. ஆனால் அவர் 100 கிராம் அதிக எடையுடன் இருக்கிறார். இதனால் தான் இந்த தகுதி நீக்கம் என்று ஒலிம்பிக் கமெட்டி அறிவித்தது.
அதே நேரம் அமெரிக்கா வீராங்கனை சாராவுக்கு தங்கமும், கியூபா வீராங்கனை லோபஸ் வெள்ளிப் பதக்கமும், சுசாகி வெண்கலமும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்த வினேஷ் போகத் சர்வதேச மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெருவதாகவும் தன்னால் இன்னும் போராட முடியாது என்றும் கூறினார்.
இன்று தீர்ப்பு:
இந்த நிலையில் வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார். அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. வினேஷ் போகத்திற்கு ஆதரவாக வாதங்களை முன் வைத்த சால்வே, போட்டியின் அட்டவணை, ஒரே நாளில் 3 போட்டிகளில் விளையாடியது உள்ளிட்ட காரணங்களை அடுக்கியுள்ளார். இதனிடையே இதற்கான தீர்ப்பு இன்று இரவு 9.30 மணியளவில் வெளியாக உள்ளது. வினேஷ் போகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் பட்சத்தில் அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.