TENNIS: கொரோனா தடுப்பூசி விவகாரம்: கொள்கையில் விடாப்பிடியாக இருந்த ஜோகோவிச்.. இறங்கி வந்த ஆஸ்திரேலியா?
உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வர ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் 21 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று, உலகின் முன்னணி நட்சத்திர வீரராக வலம் வருகிறார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற அவர், இளம் வீரர்கள் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். இந்நிலையில், நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டிற்கு சென்ற ஜோகோவிச்சிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
விளையாட்டு உலகில் பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவத்திற்கு காரணம், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்ததே ஆகும். தனக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமில்லை என விடாப்பிடியாக கூற, ஆஸ்திரேலிய அரசோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் தொடரில் பங்கேற்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. கொரோனாவால் ஆஸ்திரேலிய மக்கள் பல இழப்புகளை சந்தித்த நிலையில், தடுப்பூசி செலுத்தாமல் ஜோகோவிச்சை அனுமதித்து, ஆபத்தை எதிர்கொள்ள முடியாது என கூறி, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பிறகும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்ற முடிவில் ஜோகோவிச் நிலையாக இருந்தார்.
இதையடுத்து தங்கள் நாட்டு மக்களின் நலன் கருதி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஜோகோவிச் விளையாட அனுமதிக்க முடியாது என கூறி, அவரை அந்நாட்டை விட்டே ஆஸ்திரேலிய அரசு வெளியேற்றியது. மேலும், 2025ம் ஆண்டு வரையில் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிற்குள் வரவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்பாண்டு ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க முடியாமல் போனதால், அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று அடங்கி ஆஸ்திரேலியாவில் இயல்புநிலை திரும்பியுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு அரசும் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கட்டாய தடுப்பூசி விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, ஜோகோவிச்சும் சமீபத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தகக்து.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கி, 29ம் தேதி வரையில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க, ஜோகோவிச்சிற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டு வரையில் அவர் ஆஸ்திரேலியாவிற்குள் வர விதிக்கப்பட்டு இருந்த தடையும், திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்பார் என அவரது ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Everything is possible for those who believe in themselves. I feel blessed to be part of your team, @holgerrune2003! #RolexParisMasters pic.twitter.com/DDmyF1eD9k
— Patrick Mouratoglou (@pmouratoglou) November 6, 2022
இதனிடையே, சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் 1000 ஏடிபி டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவர் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டென்மார்க்கை சேர்ந்த holger rune என்ற 19 வயது வீரரிடம் 3-6,6-3,7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் தோல்வியை தழுவினார்.