(Source: ECI/ABP News/ABP Majha)
Bhavani Devi Wins Gold: தேசிய போட்டி வாள்வீச்சில் ஹாட்ரிக் தங்கம்... தமிழ்நாடு சார்பில் முதல் தங்கம் வென்ற பவானி தேவி... !
தேசிய விளையாட்டு போட்டிகளில் வாள்வீச்சு பிரிவில் தமிழ்நாடு சார்பில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இன்று சேபர் பிரிவு வாள்வீச்சு போட்டிகள் நடைபெற்றன. இதில் மகளிருக்கான சேபர் பிரிவு வாள்வீச்சில் பவானி தேவி பங்கேற்றார். இந்தப் பிரிவில் ஏற்கெனவே தொடர்ச்சியாக இரண்டு முறை தங்கம் வென்ற பவானி தேவி இம்முறையும் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பவானி தேவி பஞ்சாப் வீராங்கனை ஜகமீத் கவுரை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய பவானி தேவி 15- 3 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அத்துடன் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். மேலும் இந்த முறை பவானி தேவி முதல் முறையாக தமிழ்நாடு சார்பில் களமிறங்கியுள்ளார். தமிழ்நாடு சார்பில் களமிறங்கிய பவானி தேவி முதல் தேசிய போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Bhavani Devi wins GOLD🥇 in Fencing 🤺 for Tamil Nadu after winning the final 15-3 against Jagmeet Kaur of Punjab!#36thNationalGames | @IamBhavaniDevi | @Nat_Games_Guj pic.twitter.com/qbqvquAvkZ
— The Bridge (@the_bridge_in) September 30, 2022
இதற்குமுன்பாக இவர் கொச்சியிலுள்ள விளையாட்டு ஆணையத்தில் பயிற்சி செய்து வந்ததால் 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் கேரளா சார்பில் களமிறங்கினார். அந்த இரண்டு முறையும் சேபர் பிரிவு வாள்வீச்சில் இவர் தங்கம் வென்று இருந்தார். இன்று இறுதிப் போட்டியில் பவானி தேவிக்கு எதிராக விளையாடிய ஜகமீத் கவுர் கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் வெண்கலம் வென்று இருந்தார். அந்தப் போட்டியில் சேபர் பிரிவில் பவானி தேவி தங்கம் வென்று இருந்தார்.
இந்த வெற்றி தொடர்பாக பவானி தேவி ஆங்கில விளையாட்டு தளத்திற்கு அளித்த பேட்டியில், “நான் பயிற்சிக்காக நிறையே நாடுகளுக்கு சென்று வந்தேன். இதன்காரணமாக நேற்று தான் இந்தியா திரும்பினேன். ஜெட் லேக் காரணமாக சற்று சோர்வுடன் இருந்தேன். இருப்பினும் தேசிய விளையாட்டு போட்டிகள் பங்கேற்று என்னுடைய ஹாட்ரிக் தங்கப் பதக்கத்தை பெற்றது மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.
Bhavani Devi @IamBhavaniDevi Wins Gold as she defeats Jagmeet Kaur of Punjab 15-3 in final of Sabre Individual. @BoriaMajumdar @RevSportz @Nat_Games_Guj @Media_SAI pic.twitter.com/d33pWXFEtJ
— Abhijit Deshmukh (@iabhijitdesh) September 30, 2022
அடுத்து என்னுடைய இலக்கு ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய போட்டிகளாக உள்ளது. அதைத் தொடர்ந்து உலக வாள்வீச்சு சாம்பியன்ஷிப் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளுக்காக தீவிரமாக பயிற்சி செய்ய உள்ளேன். உள்ளூர் போட்டிகளைவிட சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். ஏனென்றால் அது தான் என்னுடைய தரவரிசை முன்னேற உதவியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தேசிய விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில்...