மறுபடியும் காயம்... நியூசி., தொடரில் விலகினார் ஆர்ச்சர்!
நீண்ட இடைவெளிக்கு பின் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட தொடங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் காயம் அடைந்தார். இதனால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர். இவர், அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆவார். இவர், அணியில் இடம்பெற்றிருந்தால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். ஆனால், சமீபகாலமாக காயம் காரணமாக ஜோப்ரா ஆர்ச்சர் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்கமுடியவில்லை. இது, அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த ஜோப்ரா ஆர்ச்சர், டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் மட்டுமே விளையாடினார். கை விரல் மற்றும் வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தின் பாதிப்பு அதிகமானதால் ஒருநாள் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். அதன்பிறகு, காயத்துக்கு ஆப்ரேஷன் செய்து கொண்ட ஜோப்ரா ஆர்ச்சர் , ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான அவர், கடந்த இரண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிதன் மூலமே, அவரின் பந்துவீச்சு திறமை வெளியுலகிற்கு தெரியவந்தது. ஐபிஎல் தொடரில் வெளியப்படுத்திய திறமையின் காரணமாக கிடைத்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் காயத்தால் இந்திய தொடரில் விலகிய ஜோப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
இதனிடையே, காயத்தில் இருந்து மீண்ட ஆர்ச்சர் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இதன் மூலம் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் குஷியாகினர். கடந்த வாரம் நடைபெற்ற கென்ட் அணிக்கு எதிரான போட்டியில் சகெக்ஸ் அணிக்காக களமிறங்கிய ஆர்ச்சர், முதல் இன்னிங்ஸில் 13 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ஓவர்கள் பந்துவீசிய நிலையில் மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால் பந்துவீசவில்லை. மீண்டும் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பெரும் கவலைக்கு உள்ளானது. ஆர்ச்சரின் காயம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளார். ஜூன் மாதம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. முதல் போட்டி ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது. ஜோப்பர் ஆர்ச்சரில் விலகல் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆர்ச்சர் இல்லாமல் இங்கிலாந்து அணி இந்திய அணியிடம் தடுமாறியது குறிப்பிடத்தக்கது.