ஐபிஎல் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த சூர்யகுமார்… மும்பை ரன் ரேட் மளமள உயர்வு!
அவர் முன்னதாக 2021-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அப்போது அவர் 40 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை வான்கடே மைதானத்தில் செவ்வாய்கிழமை (மே 9) நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியில் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ்-இன் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோராக இது அமைந்தது.
மும்பை அணியின் பெரிய வெற்றி
மும்பை அணி 21 பந்துகள் மீதமுள்ள நிலையில் பெற்ற இந்த வெற்றி அவர்களின் மொத்த ரன் ரேட் விகிதத்திற்கு (NRR) ஒரு பெரிய ஏற்றத்தை அளித்தது. இதனால் புள்ளிகள் அட்டவணையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். மேலும் இந்த பெரிய வெற்றி கடைசி கட்டத்தில் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைய பெரும் உதவியாக இருக்கும். ஆர்சிபி 199 ரன்களை குவித்து ஒரு நல்ல ஸ்கோரை பதிவு செய்தனர். ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் இருவரும் அரை சதம் அடித்து, 120 ரன்கள் மொத்தமாக குவிக்க, அபார பார்ட்னர்ஷிப்பை தந்தனர். பந்துவீச்சில் ஜேசன் பெஹ்ரென்ட்ராஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சூர்யகுமார் அதிரடி
தொடர்ந்து ஆடிய மும்பை அணிக்கு, இஷான் கிஷன் 21 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அற்புதமான தொடக்கத்தை தந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹல் வதேரா கைகோர்த்து ஆர்சிபி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். வெறும் 35 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் யாதவ் 83 ரன்கள் குவித்து அதிரடி காண்பித்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் விளாசிய அவர் அணி அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற முழு காரணமாக இருந்தார். 237 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர் ஆட்டத்தை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
ஐபிஎல்லில் அதிகபட்ச ஸ்கோர்
சில மாதங்களாக ஃபார்மை இழந்து இருந்த அவர் தற்போது மீண்டு வந்தது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு ஐபிஎல் தொடர்களில் அவரது அதிகபட்ச ஸ்கோரையும் இந்த போட்டியில் பதிவு செய்தார். அவர் முன்னதாக 2021 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அப்போது அவர் 40 பந்துகளில் 82 ரன்கள் குவித்து இருந்தார் என்பது குறிப்பிடததக்கது.
இரு அணி கேப்டன்கள் கருத்து
"விக்கெட்டின் சூழல் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். அவர்கள் ஒரு வலுவான சேஸிங் டீம், மேலும் நன்றாக பேட்டிங் செய்யும் வீரர்கள் கடைசிவரை உள்ளனர். கடைசி ஐந்து ஓவர்களில் நாங்கள் நன்றாக ரன் குவிக்க தவறியதே தோல்விக்கு முக்கிய காரணம்," என்று RCB கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் கூறினார். "நாங்கள் அவர்களை 200 க்கு குறைவாக கட்டுப்படுத்தினோம். அது ஒரு பெரிய முயற்சி. ஏனெனில் அவர்கள் இந்த பிட்சில் 220 அல்லது அதற்கு மேல் எடுத்திருக்க வாய்ப்பு இருந்தது. பாதுகாப்பான ஸ்கோர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் பார்த்த கடைசி நான்கு ஆட்டங்களில் 200 க்கு மேல் அடித்துள்ளனர். பெரும்பாலான அணி பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள், அதனால் ரன் குவிகிறது. பேட்டர்கள் ரிஸ்க் எடுத்து 200க்கு மேல் ஸ்கோரைத் எடுத்து செல்கின்றனர். பேட்டர்களின் மனநிலை அணிக்காக ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான்," என்று மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மேலும் கூறினார்.