Marina Beach: மெரினா பீச், இலவச எண்ட்ரி கட்? 50 ஏக்கர், அட்டகாசமான வசதிகள் - புதுசா என்ன வருது தெரியுமா?
Marina Beach: சென்னை மெரினா கடற்கரையின் குறிப்பிட்ட பகுதிக்கு பொதுமக்கள் இனி கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற தகவலுக்கு மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Marina Beach: நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் அடிப்படையில் சென்னை மெரினா கடற்கரையில், சில மேம்பாட்டு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
சென்னை மெரினா கடற்கரை
சென்னை மெரினா கடற்கரை சுற்றுலா தளம் என்பதையும் தாண்டி, மாநகரின் தவிர்க்க முடியாத அடையாளமாகவும் உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இளைப்பாற ஏற்ற இடமாக திகழ்கிறது. ஒவ்வொரு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களின் போதும் லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்து நேரத்தை செலவிடுகின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம், கடற்கரைக்கு வருவோரிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பதும் ஆகும். இந்நிலையில் தான், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள ஒரு சிறிய பகுதிக்கு, பொதுமக்கள் இனி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்ற தகவல் வெளியானது.
மெரினா கடற்கரை - பொதுமக்களுக்கு கட்டணம்?
நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் அடிப்படையில் 6 கோடி ரூபாய் செலவில், மெரினா கடற்கரையில் மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. அதன்படி, குறிப்பிட்ட பகுதியில் சாய்வு இருக்கைகள், சிற்றுண்டி கடைகள், அவுட்டோர் ஜிம், வாட்ச்-டவர்ஸ், தோட்டம், கழிவறை சர்ஃபிங் பகுதி மற்றும் முதலுதவி மையங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதற்காக 250 ஏக்கர் நீளமுள்ள மெரினா கடற்கரையில் 50 ஏக்கர் நிலத்தை சென்னை மாநாகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
வசதிகள் என்னென்ன?
திட்டம் தொடர்பான மாநகராட்சியின் சாத்தியக்கூறு அறிக்கையில், குறிப்பிட்ட பகுதியில் என்னென்ன வசதிகள் இடம்பெற்று இருக்கும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. அதன்படி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடற்கரையில் ஒரு தகவல் பலகை, 360 டிகிரி கண்காணிப்பு கேமரா, பிரத்தியேக உயிர் காக்கும் கருவிகள், 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பு, ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், நீச்சல் வீரர்களுக்கான அறைகள் மட்டுமின்றி சர்ஃபிங்கில் ஈடுபடுபவர்களுக்கான அறைகளும் இடம்பெற உள்ளன. மணலில் நடந்தபடி யாரும் அந்த பகுதிக்கு யாரும் வராதபடி தனிப்பாதை அமைக்கப்படும். சர்வீஸ் லேனில் பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
எப்போது திறப்பு?
கடற்கரையின் இந்தப் பகுதி புனரமைக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மண்டலத்திற்குள் வியாபாரிகள் கடைகள் அமைக்க தடை செய்யப்பட உள்ளனர். நீச்சல் குளம் பக்கத்திலிருந்து வாசல் அமைக்கப்பட்டு, நுழைவுக் கட்டணத்துடன் கட்டுப்படுத்தப்பட்ட நுழைவு வழங்கப்படும். மே மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான கட்டணம் எவ்வளவு என்பது தற்போது வரை நியமிக்கப்படவில்லை. அதேநேரம், நீலக்கொடி கடற்கரை திட்டத்தின்படி மேம்படுத்தப்பட்ட கோவளம் கடற்கரையில் வசூலிக்கப்படும் கட்டணமே, மெரினா கடற்கரையிலும் வசூலிக்கப்படும் என கூறப்பட்டது. அதனை கருத்தில் கொண்டால், கோவளம் கடற்கரையில் தனிநபர் ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், அதனை மறுத்துள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என விளக்கமளித்துள்ளது.
பராமரிப்பு பணிகள்
தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சுமார் 25 தொழிலாளர்களை கடற்கரையை கண்காணிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடுத்த உள்ளது. கடற்கரையை கண்காணிக்க ஆகும் மாத செலவு, சம்பளம் மற்றும் இயந்திரங்கள் உட்பட ரூ.6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரை ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக புதுப்பிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததும், கலங்கரை பகுதி மேம்பாட்டு பணிக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சர்வீஸ் லேனில் ரோப் கார் திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
திட்டத்தின் நோக்கம் என்ன?
மெரினா கடற்கரையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் இலக்கு என்பது 33 உலகளாவிய அளவுகோல்களை பூர்த்தி செய்வதன் மூலம் நீலக் கொடி சான்றிதழைப் பெறுவதாகும். இது நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. எதிர்பார்த்தபடி அங்கீகரம் கிடைத்தால், நீலக்கொடி கடற்கரை பட்டியலில் உள்ள கோவளம் கடற்கரை உடன் மெரினாவும் இணையும். கோவளத்தின் 400 மீட்டர் நீலக் கொடி கடற்கரை பகுதி சுத்தமாக இருந்தாலும், நுழைவுக் கட்டணம் காரணமாக அதிக கூட்டத்தை ஈர்க்கவில்லை. பிரதான கோவளம் கடற்கரையில், வார இறுதி நாட்களில் குறைந்தது ஒரு லட்சம் பேர் வருகை தருகின்றனர். அதேசமயம் நீலக்கொடி கடற்கரை பகுதிக்கு 10,000 பேர் மட்டுமே வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட சிறப்பானதாக மேம்படுத்தி, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மெரினா கடற்கரை மெருகூட்டப்பட்டுள்ளது.




















