Mayank Agarwal: இதுதான் லாஸ்ட் சான்ஸ்! மயங்க் அகர்வால் மாஸ் காட்டுவாரா? மங்கிப்போவாரா?
தேவ்தத் படிக்கல்லிற்கு பதிலாக ஆர்சிபி அணிக்காக மாற்று வீரராக களமிறங்க உள்ள மயங்க் அகர்வால் மீண்டும் தன்னை நிரூபிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வரும் ஐபிஎல் தொடர் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துள்ள ஆர்சிபி அணிக்கு தற்போது புது சிக்கல் உருவாகியுள்ளது. ஆர்சிபி அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக அணியில் இருந்து விடைபெற்றுள்ளார்.
படிக்கல்லுக்கு பதிலாக மயங்க் அகர்வால்:
அவருக்கு பதிலாக தற்போது அணியில் மயங்க் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆர்சிபி அணிக்காக தேவ்தத் படிக்கல் இந்த தொடர் முழுவதும் ஒன்டவுன் ஆர்டரில் ஆடி வந்தார். தற்போது அவர் இல்லாத நிலையில் அந்த இடத்தில் யார் ஆடப்போகிறார்கள்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
ஏலம் போகாத வீரர்:
இந்த இடத்தை மயங்க் அகர்வால் நிரப்புவார் என்று கருதப்படுகிறது. 35 வயதான மயங்க் அகர்வால் ஆர்சிபி அணிக்காக 2011ம் ஆண்டு தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கினார். தனது சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணியிலும் இடம்பிடித்தார். கே.எல்.ராகுலுடன் பஞ்சாப் அணிக்காக தொடக்க வீரராக அசத்தியுள்ளார். ஆனால், அதன்பின்பு மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட மயங்க் அகர்வால் கடந்த ஏலத்தில் யாராலும் ஏலம் எடுக்கப்படவில்லை.
வாய்ப்பை பயன்படுத்துவாரா மயங்க்?
இந்த நிலையில் மீண்டும் அணிக்குள் வந்துள்ள மயங்க் அகர்வால் தன்னை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் மொத்தம் 127 போட்டிகளில் ஆடிய அனுபவம் அவருக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் 1 சதம், 13 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 665 ரன்களை மயங்க் அகர்வால் எடுத்துள்ளார்.
21 டெஸ்ட் போட்டிகளில் 1488 ரன்களும், 111 முதல்தர கிரிக்கெட்டில் 8 ஆயிரத்து 50 ரன்களும், 123 லிஸ்ட் ஏ போட்டிகளில் 5 ஆயிரத்து 616 ரன்களும் எடுத்துள்ளார். 123 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 616 ரன்கள் எடுத்துள்ளார். சிறந்த பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால் தனது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வாரா? என்று பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி மட்டுமின்றி சன்ரைசர்ஸ் ஹைதரபாத், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ், கர்நாடக அணி, இந்திய பி, இந்திய சி, இந்திய நீலம், இந்தியா சிவப்பு உள்ளிட்ட பல அணிகளுக்காக மயங்க் அகர்வால் ஆடியுள்ளார்.




















