IPL 2025 KKR vs RCB: ஃபயர் விட்ட ரஹானே! பாதியிலே அனுப்பி வைத்த பாண்ட்யா! இதுதான் டர்னிங் பாய்ண்டா?
IPL 2025 KKR vs RCB: பெங்களூர் அணிக்கு எதிராக கொல்கத்தா கேப்டன் ரஹானே 25 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

IPL KKR vs RCB 2025: ஐபிஎல் 18வது சீசனின் முதல் போட்டியில் இன்று ஆர்சிபி - கொல்கத்தா அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
காட்டடி அடித்த ரஹானே:
இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஆர்சிபி அணியின் பந்துவீச்சுக்கு முதல் ஓவரிலே டி காக் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து கேப்டன் ரஹானே களமிறங்கினார். தொடக்கத்தில் நிதானம் காட்டிய ரஹானே ரஷீக் வீசிய ஓவரிலே பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார்.
அதன்பின்னர், அவர் தனது ரன்வேகத்தை குறைக்கவே இல்லை. ரஷீக்தர், குருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா என யார் வீசினாலும் பந்துகளை விளாசினார். முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே வழங்கிய யஷ் தயாள் அடுத்து வீசிய ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கினார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய ரகானே 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவரது அரைசதத்திற்கு பிறகு மறுமுனையில் நிதானம் காட்டிய சுனில் நரைன் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். இளம் வீரரான ரஷீக்தர் பந்தில் அடித்து ஆடிய சுனில் நரைன் அவரது பந்திலே அவுட்டானார்.
ஆட்டத்தை மாற்றிய குருணல் பாண்ட்யா:
இதன்பின்பு, குருணல் பாண்ட்யா வீசிய ஓவரில் கொல்கத்தா அணிக்காக அனலாக ஆடிய கேப்டன் ரஹானே காலியானார். அவர் 31 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
ஓவருக்கு 10 ரன்கள் வீதம் ஆடி வரும் கொல்கத்தா அணியை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பெங்களூர் அணி உள்ளது. அந்த அணிக்கு வெங்கடேஷ் ஐயர், ரகுவன்ஷி, ரிங்குசிங், ரஸல், ராமன்தீப்சிங் ஆகியோர் இன்னும் பேட்டிங்கில் உள்ளனர்.
200 ரன்களுக்குள் கட்டுப்படுத்துமா?
பெங்களூர் அணியை பொறுத்தவரை தற்போது வரை பந்துவீச்சு பெரிதாக எடுபடாத நிலையில் அடுத்தடுத்த ஓவர்களை சிறப்பாக வீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் சிறப்பாக வீசினால் மட்டுமே கொல்கத்தா அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடியும்.
வருண் சக்கரவர்த்தி, ஜான்சன், ராணா, சுனில் நரைன், ரஸல் என கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பட்டாளமும் பெரியளவில் உள்ளது. இதனால், இரண்டாவது இன்னிங்சில் பெங்களூர் அணி இலக்கை நெருங்குவது சவாலானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

