RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை! சீசனை வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
RR Vs LSG, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன.
RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் இண்டோர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கே. எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
ராஜஸ்தான் - லக்னோ மோதல்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இரண்டு அணிகளும் நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டுவதால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
கடந்த தொடரில் முதல் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், கடைசி 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. அதேநேரம், 2022ம் ஆண்டு அறிமுகமான லக்னோ அணியோ, இரண்டு முறையும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணி பட்லர், ஜெய்ஷ்வால், சாம்சன், பவல் மற்றும் ஜுரெல் என வலுவான பேட்டிங்கை கொண்டிருக்க, பந்துவீச்சில் சாஹல் மற்றும் அஷ்வின் நம்பிக்கை அளிக்கின்றனர்.
வேகப்பந்துவீச்சு சற்று பலவீனமாகவே தெரிகிறது. அதோடு ஒரு அணியாக சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே ராஜஸ்தானால் வெற்றியை ஈட்ட முடியும். மறுமுனையில் லக்னோ அணியில் மேயர்ஸ், படோனி, பூரான், ராகுல் மற்றும் ஸ்டோய்னிஷ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்துள்ளனர். ரவி பிஷ்னோய் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 3 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி இரண்டு முறையும், லக்னோ அணியும் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 178 ரன்களையும், குறைந்தபட்சமாக 144 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 162 ரன்களையும், குறைந்தபட்சமாக 154 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
ஜெய்ப்பூர் மைதானம் எப்படி?
சவாய் மான்சிங் மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றன. முதலில் பேட்டிங் செய்த அணிகள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றன, சேசிங் அணிகள் இரண்டு முறை வெற்றி பெற்றன.
உத்தேச அணி விவரங்கள்:
ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் , ரோவ்மன் பவல், துருவ் ஜூரல், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நந்த்ரே பர்கர், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்
லக்னோ: கைல் மேயர்ஸ், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன், கே.எல். ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருனால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர், மொஹ்சின் கான்