Chahal on RCB: ஆர்சிபி என்னை கேட்டிருந்தால்... பெங்களூரு அணி குறித்து மனம் திறந்த சாஹல்
பெங்களூரு அணி தன்னை தக்கவைக்காதது தொடர்பாக யுஸ்வேந்திர சாஹல் மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. புனேவில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த இரு அணிகளும் தங்களுடைய முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இருப்பார்கள் என்பதால் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் போட்டிக்கு முன்பாக ராஜஸ்தான் அணியின் வீரர் யுஸ்வேந்திர சாஹல் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, “நான் ஆர்சிபி அணியுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்து இருந்தேன்.ஆகவே ஐபிஎல் தொடரில் வேறு ஒரு அணிக்காக விளையாட மாட்டேன் என்று நினைத்தேன். என்னிடம் சமூக வலைதளத்தில் தற்போதும் ரசிகர்கள் எதற்காக ஆர்சிபி அணியை விட்டு சென்றீர்கள் என்று கேட்கின்றனர்.
🤷♂️🤷♀️ pic.twitter.com/yXPHiB4kvP
— Rajasthan Royals (@rajasthanroyals) March 24, 2022
ஆனால் உண்மையில் நான் அணியைவிட்டு செல்லவில்லை. ஆர்சிபி அணி என்ன தக்கவைக்கவில்லை. என்னிடம் விராட் கோலி,மேக்ஸ்வேல்,முகமது சிராஜ் ஆகியோர் தக்கவைக்கப்படுகின்றனர் என்று தான் கூறினார்கள். என்னை தக்கவைக்க போவது குறித்து என்னிடம் கேட்கவேயில்லை. அப்படி அவர்கள் கேட்டிருந்தால் நான் முதலில் ஒப்புக் கொண்டிருந்திருப்பேன். ஏனென்றால் எனக்கு பணத்தைவிட ஆர்சிபி அணிக்கு விளையாடுவது தான் முக்கியமானதாக இருந்திருக்கும். தற்போதும் என்னுடைய பெங்களூரு ரசிகர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்களுடைய அன்பை எப்போதும் நான் ஏற்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 8 சீசன்களாக ஆர்சிபி அணிக்காக விளையாடியுள்ளார். இவர் ஆர்சிபி அணிக்காக 113 போட்டிகளில் 139 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த முறை இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணியில் ரவிச்சந்திரன் அஷ்வின் உடன் இணைந்து சாஹல் களமிறங்க உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் போட்டியில் களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் பட்லர் மற்றும் அஷ்வின் ஒரே அணியில் களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இதனால் இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்