IPL 2021, MI vs CSK: ஒரே தொடரில் 4ஆவது அரைசதம் கடந்து அசத்திய ருதுராஜ் ; மும்பைக்கு 157 ரன்கள் இலக்கு!
நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதத்தை பதிவு அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டு பிளசிஸ் காயம் குணம் அடைந்து சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் மும்பை அணியில் சிறிய காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அத்துடன் ஹர்திக் பாண்ட்யாவும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இன்று தன்னுடைய 100ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் டாஸை வென்று பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டுபிளசிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் பொல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த மோயின் அலியும் ரன் எதுவும் எடுக்காமல் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. அதன்பின்பு அம்பாத்தி ராயுடு கையில் பந்து பட்டதால் காயம் அடைந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து வந்த சுரேஷ் ரெய்னாவும் 4 ரன்களுடன் அவுட் ஆகி மிகப்பெரும் அதிர்ச்சியை தந்துள்ளார். பின்னர் வந்த தல தோனியும் 3 ரன்களுடன் ஆடெம் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 6 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின்னர் ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஒரளவு அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். இதனால் சிஎஸ்கே அணி 16 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ரவிந்திர ஜடேஜா 26 ரன்களுடம் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் வந்த பிராவோ ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட தொடங்கினார். மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்தார். இருவரும் குறிப்பாக ஆட்டத்தின் 19ஆவது ஓவரில் சேர்ந்து 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி 24 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின்னர் 20ஆவது ஓவரை பும்ரா வீசினார் அதில் பிராவோ கேட்ச் கொடுத்து 8பந்துகளில் 23 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் 156 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 88 * ரன்கள் எடுத்தார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் நான்காவது முறை அரைசதம் கடந்து அசத்தினார்.
மேலும் படிக்க:சி.எஸ்.கே.,வும் பொல்லாதவன் பொல்லார்டும்..மும்பை அணி ஆபத் பாந்தவனின் அதிரடி ஆட்டங்கள்!