சி.எஸ்.கே.,வும் பொல்லாதவன் பொல்லார்டும்..மும்பை அணி ஆபத் பாந்தவனின் அதிரடி ஆட்டங்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி என்றால் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் தள்ளி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் அந்தத் தொடரின் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஐபிஎல் தொடரில் எப்போதும் சென்னை-மும்பை போட்டி என்றாலே ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய விருந்தாகவே அமையும். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் அதிக முறை வென்ற இரண்டு அணிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இந்த இரண்டு அணிகள் தான் உள்ளன.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி என்றால் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்டு தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவர் பேட்டிங்கில் அதிரடி காட்டி மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதில் வல்லவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் பல நல்ல வீரர்கள் இருந்தாலும் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபில்டிங் ஆகிய மூன்றிலும் சிறப்பாக செயல்படுவார். அந்தவகையில் அவர் சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய சில போட்டிகளை சற்று திரும்பி பார்ப்போம்.
60*vs சென்னை சூப்பர் கிங்ஸ் (2013):
2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. ஏற்கெனவே 2010 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று இருந்தது. எனவே இம்முறையும் சென்னை அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 10 ஓவர்களின் முடிவிற்குள் 52 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கி பொல்லார்டு தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அந்தப் போட்டியில் ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டார். 32 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60* ரன்கள் எடுத்தார். அத்துடன் பந்துவீச்சின் போது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் பொல்லார்டு ஆட்டம் தான் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல மிகவும் முக்கியமான தாக அமைந்தது.
41* vs சென்னை(2019):
2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அப்போது தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் டி காக் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். எனினும் அதன்பின்னர் 89 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி தவித்தது. அப்போதும் மும்பை அணியை சற்று நல்ல ஸ்கோருக்கு எடுத்து சென்றவர் பொல்லார்டு தான்.
இவர் இந்தப் போட்டியில் முதலில் சற்று நிதானமாக விளையாடினாலும் பின்னர் இறுதி கட்டத்தில் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார். 25 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உதவியுடன் 41* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது.
87* vs சென்னை (2021):
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த மே 1ஆம் தேதி மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட்(50), மோயின் அலி (58) மற்றும் ராயுடு(72*) என அதிரடியாக அரைசதம் கடந்து அசத்தினர். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 218 ரன்கள் விளாசியது.
வெற்றி பெற மிகவும் கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு வழக்கம் போல் நல்ல தொடக்கம் அமைந்தது. முதல் விக்கெட்டிற்கு மும்பை அணி 71 ரன்கள் சேர்த்தது. எனினும் அதன்பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்களுடம் வெளியேறினார். இதனால் மும்பை அணி 81 ரன்களுக்கு3 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய பொல்லார்டு மீண்டும் மும்பை அணியின் ஆபத் பாண்டவராக அமைந்தார். தன்னுடைய அசாத்திய பேட்டிங்கின் மூலம் சென்னை அணியின் பந்துவீச்சை நான்கு பக்கங்களும் சிதறடித்தார். 34 பந்துகளில் 8 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டர்களின் உதவியுடன் 87* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அத்துடன் மும்பை அணி 219 ரன்களை சேஸ் செய்ய வைத்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இப்படி சென்னை அணிக்கு எதிரான போட்டி என்றாலே பொல்லார்டு அதிரடி தான் எப்போதும் ரசிகர்களுக்கு நியாபகம் வரும். ஆகவே இன்று நடைபெறும் போட்டியிலும் பொல்லார்டு அதிரடி தொடருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: என்ன விசில இறக்க ரெடியா.? சென்னை சூப்பர் கிங்ஸ் போட்ட விசில் ட்வீட் !