"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
அமித் ஷா பெரிய வாஷிங் மெஷின் வாங்கியுள்ளதாகவும் அதில் யார் உள்ளே போனாலும் சுத்தமா வெளியே வருகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
தான் நகராட்சி பள்ளியில் படித்ததாகவும் ஆனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தவர். எனவே, அவரின் ஆங்கிலம் நன்றாக இருப்பதாகவும் ஆனால், அவரின் செயல்கள் நன்றாக இல்லை என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலாய்த்து பேசியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் காரணமாக ஆளும் பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமளி காரணமாக இரு அவைகளும் முடங்கி போயின.
"அமித் ஷா வாங்கிய வாஷிங் மெஷின்"
பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அரசியலமைப்பு தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடந்து வருகிறது. மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அமித் ஷா பெரிய வாஷிங் மெஷின் வாங்கியுள்ளார்.
யார் உள்ளே போனாலும் சுத்தமா வெளியே வருகிறார்கள். ஒரு மாநிலமோ, பிராந்தியமோ உங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால் பழிவாங்க வேண்டாம். தேர்தலுக்காக பிரதமர் மோடி எல்லா இடங்களுக்கும் செல்கிறார். ஆனால், மணிப்பூர் செல்ல தயாராக இல்லை.
ராகுல் காந்தி அங்கு சென்று யாத்திரை மேற்கொண்டார். உங்களுக்கு இவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், நீங்கள் அங்கு செல்லவில்லை. நீங்கள் ஏன் இந்த சிக்கலை தீர்க்கவில்லை?" என்றார்.
பங்கமாக கலாய்த்த கார்கே:
தொடர்ந்து பேசிய கார்கே, "இந்த அரசியல் நிர்ணய சபை வெறும் சலசலப்பான கூட்டமாக இருந்திருந்தால் வரைவுக் குழுவின் பணி மிகவும் கடினமான ஒன்றாக இருந்திருக்கும். குழப்பத்தைத் தவிர வேறொன்றும் இருந்திருக்காது.
சபைக்குள் காங்கிரஸ் கட்சி இருப்பதால் குழப்பம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பூஜ்ஜியமாக குறைந்துவிட்டன. அது, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஒழுங்கு உணர்வைக் கொண்டு வந்தது என அம்பேத்கரே சொல்லி இருக்கிறார்.
பாஜக இடஒதுக்கீட்டிற்கு எதிரானது. அதனால்தான், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருக்கிறார்கள். மோடிக்கு நாட்டின் சுதந்திரப் போராட்டம் பற்றி அதிகம் தெரியாது. பண்டித ஜவஹர்லால் நேருவின் பெயரால் அனைவரையும் அவமதிக்கிறீர்கள்.
அவருடன் சர்தார் படேல் இருந்தார். அம்பேத்கர் இருந்தார். முதல்வர்களுக்கு நேரு கடிதம் எழுதியிருந்தார். மோடி, தனது உரையில் உண்மைகளை திரித்து நேருவை அவதூறாகக் குறிப்பிட்டார். அதற்காக அவர் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுவே எனது கோரிக்கை" என்றார்.
நிர்மலா சீதாராமனை கலாய்த்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே, "எனக்கும் படிக்கத் தெரியும் என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். நான் முனிசிபாலிட்டி பள்ளியில் படித்திருக்கிறேன். அவர் (நிர்மலா சீதாராமன்) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்.
அவருடைய ஆங்கிலம் நன்றாக இருக்கும். அவருடைய இந்தி நன்றாக இருக்கும் என்பது நிச்சயம். ஆனால், செயல்கள் நன்றாக இல்லை" என்றார்.