HBD MS Dhoni: சிஎஸ்கே அணியில் தோனியின் மறக்கமுடியாத தருணங்கள்… தனித்துவமான ஆட்டங்கள்!
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஐபிஎல்-இல் மட்டுமே தோனியை காணமுடியும் என்ற நிலை வந்த பிறகுதான், தோனி முன்பு செய்த சாதனைகள் எல்லாம் பெரிதாக தெரிய ஆரம்பித்துள்ளன.
அதிரடி பேட்டிங், மின்னல் வேக விக்கெட் கீப்பிங், ஐஸ்-கூல் கேப்டன்சி என எதுவாக இருந்தாலும், மகேந்திர சிங் தோனி மிகவும் எளிதாக கிரிக்கெட்டின் ஒரு அசாதாரணமான வீரர் என்று உறுதியாக கூறலாம். அவர் ஆடும் காலங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் கோப்பையை வெல்வதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலககோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 5 ஐபிஎல் கோப்பை, இரண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பை, இரண்டு ஆசியக்கோப்பை என அவர் வென்ற கோப்பைகளும், அவை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செல்ஃப்களும் சொல்லும், அவர் யார் என்று! 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மட்டுமே தோனியை காணமுடியும் என்ற நிலை வந்த பிறகுதான், தோனி முன்பு செய்த சாதனைகள் எல்லாம் பெரிதாக தெரிய ஆரம்பித்துள்ளன. அதற்கு காரணம் அவர் சென்ற பிறகு கோப்பைகள் வெல்லாததும், அவர் தொடர்ந்து ஐபிஎல் கோப்பைகளை வெல்வதும் தான். ஐபிஎல் என்றாலே தோனி என்னும் அளவுக்கு அவருடைய புகழ் ஓங்கி நிற்கிறது. ஐபிஎல் இல் அவருடைய சிறந்த தருணங்கள் இதோ:
ஐபிஎல் 2023 வெற்றிக்குப் பிறகு ஜடேஜாவை தூக்கிய தருணம்
நேற்று நடந்தது போல இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கும் இந்த காட்சியில் பலரும் கண் கலங்கி இருப்பார்கள். 2023 ஐபிஎல் இறுதிப் போட்டி பல்வேறு காரணங்களுக்காக வரலாற்றுப் புத்தகங்களில் நிலைத்திருக்கும், ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்ட ரிசர்வ் நாளில் நடக்க, குஜராத் டைட்டன்ஸ் 214 ரன்களை குவிக்க, மீண்டும் இடைவேளையின் போது மழை குறுக்கிட்டதால், சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதனையும் வென்றது தோனி படை. இவை எல்லாவற்றிற்கும் மேல் வின்னிங் ஷாட் அடித்த ஜடேஜாவின் தோனி தூக்கியதுதான் பலரை உருக வைத்தது, இந்த காட்சி சென்னை ரசிகர்கள் நெஞ்சில் என்றும் நிற்கும்.
வெற்றிக்கான சிக்ஸர் அடித்து தலையில் குத்திக் கொண்டு கொண்டாடியது
2010 ஐபிஎல்லின் போது வாழ்வா சாவா போட்டியில், தந்திரமான தர்மசாலா பிட்ச்சில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 192 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயித்தது. அந்த ஆட்டத்தில் கடைசி இரண்டு ஓவர்களில் சென்னை அணி 29 ரன்களை சேஸ் செய்ய வேண்டியிருந்தது. அந்த போட்டியில் தோனி வெறும் 29 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். தோனி இறுதி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்து வெற்றியை பறித்த போது, தனது கையுறைகளால் ஹெல்மெட்டில் குத்திய காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. பொதுவாகவே பெரிதாக உணர்வுகளை வெளிக்காட்டாத தோனி, அவ்வளவு கொண்டாடுகிறார் என்றால் அந்த இடம் எவ்வளவு கடினமானது என்று பலாராலும் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆர்சிபி-க்கு எதிராக 84 ரன்களை குவித்தது
2019 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 162 ரன்களை இலக்காகக் கொண்டிருந்தது. சென்னை டாப் ஆர்டர் பெரிய சரிவைச் சந்தித்த பிறகு, தோனி களத்திற்கு வந்தார். அந்த போட்டியில் அவர் அவரது ஐபிஎல் வாழ்க்கையின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார். கடைசி ஓவரில், சென்னைக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மூன்று பயங்கரமான சிக்ஸர்களை அடித்து அதகளம் செய்தார். ஆனாலும் இறுதியில் இலக்கை ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் விட்டு, வெற்றியை தவற விட்டது சென்னை அணி.
பொல்லார்டுக்கு நேராக வைத்த ஃபீல்டு செட்டப்
MS தோனிக்கு எந்த பேட்டருக்கு எங்கு பீல்டர்கள் இருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே உள்ளுணர்வு இருக்கும். அதன்படி பல வீரர்களை ஆட்டமிழக்க செய்ததை நாம் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் ஆச்சர்யம் அடைய செய்தவது பொல்லார்டுக்கு அவர் வைத்த ஃபீல்டு செட்டப் தான். 2010 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே கை ஓங்கி இருந்த நிலையில், அசகாய சூரனாக கீரன் பொல்லார்ட் வந்திறங்கி ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். 7 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்துகொண்டிருந்த பொல்லார்டை விட்டிருந்தால் கோப்பையை தட்டி சென்றிருப்பார். நேராக அடித்துக்கொண்டு இருந்த பொல்லார்டை தடுக்கலாம் என நினைத்து, பந்து வீசுபவருக்கு நேராக மிட் ஆஃப் சர்க்கிளுக்குள், மேத்யூ ஹெய்டனை நிறுத்தினார். இது போன்ற ஒரு ஃபீல்டிங் பொசிஷன் அதுவரை கிரிக்கெட்டில் கிடையாது, அதற்கு பெயரும் கிடையாது, நிறுத்தக் கூடாது என்ற விதியும் கிடையாது. அந்த ஃபீல்டிங்கிற்கு பொல்லார்ட் ஆட்டமிழப்பார். அந்த நேரத்தில் ஹெய்டனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பார் பொல்லார்ட். தற்போது ஆஷஸ் டெஸ்டில் ஸ்டோக்ஸ் அதே போன்ற ஒரு பீல்டிங்கை கவாஜாவுக்கு எதிராக வைத்து விக்கெட் எடுத்தபோது, தோனி பெயர் நினைவு கூறப்பட்டது. அந்த ஃபீல்டு செட்டப் தோனியின் பெயரை பெற்றது!