Ahmedabad Weather: மேகம் கருக்குது... மின்னல் அடிக்குது... அகமதாபாத்தில் நடக்குமா..? நடக்காதா..? ஐ.பி.எல் இறுதிப்போட்டி?
Ahmedabad Weather: அகமதாபாத் தொடர்பான வானிலை அறிக்கை ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் நகரில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
ஐ.பி.எல். இறுதிப்போட்டி:
இந்தியன் பிரீமியர் லீக் 16-வது தொடரின் இறுதிப்போட்டியில் நான்கு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இது அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
மழைக்கு வாய்ப்பு?
குஜராத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதோடு, போட்டி தொடங்கும் நேரத்தில் லேசான மழை பெய்வதற்கு 50 சதவீத வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
With heat lot of cumulus clouds have developed and as day goes on these clouds will develop, grow and will mature into Cb clouds and expected to march into Gujarat. pic.twitter.com/7tAzJmpxTB
— Tamil Nadu Weatherman (@praddy06) May 29, 2023
அகமதாபாத்தில் குவிந்த ரசிகர்கள்:
பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. 70 லீக் போட்டிகள் மற்றும் 3 பிளே-ஆஃப் சுற்று போட்டிகளுக்குப் பிறகான இறுதிப்போட்டிக்கு, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடக்கவிருந்த, இறுதிப்போட்டியை காண ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்து இருந்தனர். அது சென்னையா? குஜராத்தா? என சந்தேகம் எழும் அளவிற்கு பல்லாயிரக்கணக்கான சென்னை ரசிகர்கள் மஞ்சள் உடையில் மைதானத்தை ஆக்கிரமித்து இருந்தனர். குஜராத் அணி கோப்பையை தக்க வைக்குமா? சென்னை அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றுமா? என போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
குறுக்கே வந்த கனமழை:
ஆனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த கனவையும் நீர்த்து போகச் செய்தது அகமதாபாத்தில் கொட்டி தீர்த்த கனமழை. சில மணி நேரம் இடைவெளி விட்டால் கூட போட்டியை நடத்திவிடலாம் என, ஐபிஎல் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்து வந்தது. இதனால், கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் போட்டியை காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்திலேயே காத்துக்கிடந்தனர். இரவு 11 மணிக்குப் பிறகும் கூட மழை விடாததால், ரிசர்வ் டே முறையில் இறுதிப்போட்டி இன்று நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், இன்றும் மழை பெய்தால் போட்டியில் என்ன நடக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
போட்டியின் போது மழை பெய்தால் என்ன நடக்கும்:
- போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்தால், வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படும்.
- அதன்படி, 9.35 மணிக்கு போட்டி தொடங்கினால் கூட ஓவர்கள் எதுவும் குறைக்கப்படமால் முழு போட்டி நடைபெறும்
- மழை தொடர்ந்தால் அதற்கான நேரத்திற்கு ஏற்றவாறு ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும்
- நள்ளிரவு 1.20 மணிக்குள் அதிகபட்சம் 5 ஓவர்கள் தொடங்கி குறைந்தபட்சம் சூப்பர் ஓவர் முறையிலாவது போட்டியை நடத்தி முடிக்க முயற்சிகள் எடுக்கப்படும்.
- ஒருவேளை, இன்றும் நள்ளிரவு 1.20 மணி வரையில் மழை தொடர்ந்து சூப்பர் ஓவருக்கு கூட வாய்ப்பில்லாமல் போட்டி ரத்தானால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும்
வானிலை அறிக்கை சொல்வது என்ன?
இதனிடையே, அகமதாபாத் தொடர்பான வானிலை அறிக்கை ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. அதன்படி, மாலை 6 மணி வரையில் அகமதாபாத் பகுதியில் மேகமூட்டம் காணப்படும். அதேநேரம், 7 மணிக்குள் மேகக்கூட்டங்கள் கலைந்து, போட்டியை முழுமையாக நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.