IPL Broadcasting : ஒரு போட்டிக்கு 105 கோடி ரூபாய்.. புதிய சாதனையைப் படைத்த ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம்..
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் 43,050 கோடி ரூபாயை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் 43,050 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்திற்கான ஏலம் நேற்று ஆன்லைனில் தொடங்கியது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் ஆகியவற்றிற்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் டிஸ்னி ஸ்டார் இண்டியா, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இண்டியா, ஸீ எண்டர்டெய்ன்மெண்ட் எண்டர்ப்ரைஸஸ் லிமிட்டெட், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18 ஆகிய நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த ஏலத்தில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் இரண்டிற்கும் சேர்த்து அடிப்படைத் தொகையாக 30,340 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாள் முடிவில் 43,050 கோடியில் ஏலம் முடிவடைந்திருக்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்திற்கான பேக்கேஜ் ஏ பிரிவிற்கு அடிப்படை விலையாக 18,130 கோடி ரூபாயும், டிஜிட்டல் உரிமத்திற்கான பேக்கேஜ் பி க்கு அடிப்படை விலையாக 12,210 கோடி ரூபாயும் என மொத்தமாக 30,340 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரண்டிற்கும் சேர்த்து 43,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் ஒரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
The IPL rights value breaks the record on auction day one 💰
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 12, 2022
An IPL game is now worth INR 105 crore, the second-most lucrative sporting product in the world behind the NFL ▶️ https://t.co/DLRaQBK9el pic.twitter.com/CEVYrSqIKs
ரிலையன்ஸ் கடும் போட்டி:
தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு அடிப்படை விலையாக ஒரு போட்டிக்கு 33 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தொகையானது 48 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. 2023 முதல் 2027 வரையிலான காலகட்டத்திற்கான ஒளிபரப்பு உரிமத்திற்காக கடும் போட்டி நிலவுகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கான உரிமத்தை வைத்திருந்த நிலையில், தற்போதைய ஏலத்தில் 4 நிறுவனங்களும் போட்டியிட்டு வருகின்றன. டிஸ்னி ஹாட்ஸ்டார் 2022ம் ஆண்டு ஐபிஎல் மூலமாக 5,550 கோடி மட்டுமே வருமானமாக ஈட்டியிருந்த நிலையில், வரவிருக்கும் 5 ஆண்டுகளுக்காக கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம்18 டிஸ்னி நிறுவனத்திற்குப் போட்டியாக ஏலத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றும் நடக்கும் ஏலம்:
நேற்று தொடங்கிய இந்த ஏலம் 6 மணிக்கு நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஏலம் தொடங்குகிறது. நேற்று பேக்கேஜ் ஏ மற்றும் பேக்கேஜ் பி ஏலம் முடிவடைந்த பிறகு இன்று பேக்கேஜ் சி மற்றும் பேக்கேஜ் டி ஆகியவற்றிற்கு ஏலம் நடைபெறவிருக்கிறது.
ரூ.50,000 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு:
தற்போது விடப்பட்டுள்ள ஏலம் ஏற்கனவே செய்த சாதனையை விட 2.5 மடங்கு அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் இன்னும் முடிவடையாத நிலையில் இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்திற்கான ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி நிறுவனம் 16,347 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியிருந்த நிலையில், பேக்கேஜ் ஏ மற்றும் பி-யின் விலை இன்று 45000 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேக்கேஜ் சி மற்றும் டி யின் உரிமம் 5000 கோடிக்கு ஏலம் போனால் ஐபிஎல் வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த உரிமம் 50000 கோடியை தாண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.