Watch Video | ஜெமிமா, ஸ்மிரிதி மந்தனா..இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களின் செம்ம எனர்ஜி ஸ்டெப்ஸ்.. அதகளமான இன்ஸ்டா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் நடனமாடும் வீடியோ ஒன்று வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று ஒருநாள்,டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்றது. அதில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. மேலும் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இந்திய மகளிர் அணி முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி இழந்தது. கடைசியாக நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது.
அதன்பின்னர் இந்திய வீராங்கனைகளில் சிலர் மகளிர் பிக்பேஷ் டி20 தொடரில் பங்கேற்று வருகின்றனர். அதன்படி ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகிய இருவரும் மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு விளையாடுகின்றனர். ஸ்மிருதி மந்தானா மற்றும் தீப்தி சர்மா சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடுகின்றனர். ஷெஃபாலி வர்மா மற்றும் ராதா யாதவ் சிட்னி சிக்சர்ஸ் அணியில் விளையாடுகின்றனர். இவர்கள் தவிர ரிச்சா கோஷ் மற்றும் பூனம் யாதவ் ஆகிய இருவரும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியில் களமிறங்குகின்றனர்.
View this post on Instagram
இந்தச் சூழலில் இந்திய வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் வழக்கம் போல் சமூகவலைதளத்தில் பெரும் கவனத்தை ஈர்க்கும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர், பூனம் யாதவ், ராதா யாதவ், ஸ்மிருதி மந்தானா உள்ளிட்டோர் நடனம் ஆடுகின்றனர். எப்போதும் ஸ்மிருதி மந்தானா மற்றும் ஜெமிமா சேர்ந்தாலே ரசிகர்களுக்கு அந்த வீடியோ விருந்தாக அமையும். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கிட்டதட்ட பல முன்னணி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் உள்ளனர்.
இதனால் இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது வரை இந்த வீடியோவை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: கெயில் டூ ரோஹித் சர்மா : T20 உலகக்கோப்பையின் சிக்சர் மன்னர்கள்..!