Holi Festival 2025: ஹோலிக்கு இவ்வளவு அலப்பறையா? மகனுக்கு பாதுகாப்பு, மசூதிக்கு தார்பாய், தொழுகையில் மாற்றம்
Holy Festival 2025: உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகையால் முன்னெப்போதும் இல்லாத அளவில் பதற்றமும், சர்ச்சைகளும் வெடித்துள்ளன.

Holy Festival 2025: ஹோலி பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் தொழுகை நேரத்தையே மாற்றியுள்ளனர்.
ஹோலி கொண்டாட்டம்:
"வண்ணங்களின் திருவிழா" எனப்படும் ஹோலி என்பதுவசந்த காலம், அன்பு மற்றும் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் இந்து பண்டிகையாகும். வண்ணமயமான பொடிகளை தூவி, ஆடல், பாடல் மற்றும் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பானங்களை பகிர்ந்து உண்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்து பண்டிகை என கூறப்பட்டாலும், மதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் இந்த நாள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த முறை, ஹோலி பண்டிகையானது வெள்ளிக்கிழமை வந்துள்ளது. ரமலான் நோன்பில் உள்ள இஸ்லாமியர்களும் இன்றும் மசூதியில் தொழுகையில் ஈடுபடுவர். இதனால், உத்தரபிரதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளனது.
”மகனுக்கு பாதுகாப்பு கோரிய தந்தை”
இஸ்லாமியர்கள் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கிய சம்பல் காவல் ஆய்வாளர் அனுஜ் சவுத்ரிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை வைத்துள்ளார். முன்னதாக, ”ஒரு வருடத்தில் 52 வெள்ளிக்கிழமைகள் இருந்தாலும், ஒரே ஒரு ஹோலி மட்டுமே உள்ளது. தங்கள் மிது வண்ணப்பொடி வீசப்படக்கூடாது என்று விரும்பினால், இஸ்லாமியர்கள் அந்த நாளில் வெளியே செல்ல வேண்டாம்” என்று அனுஜ் சவுத்ரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தந்தை பாதுகாப்பு கோரிய நிலையில், அனுஜ் சவுத்ரி அதை நிராகரித்துள்ளார்.
மசூதிகள் மீது தார்பாய்கள்
காவல்துறை அதிகாரியின் பேச்சால் சர்ச்சை வெடித்த நிலையில், ஹோலி ஊர்வல வழியைக் கருத்தில் கொண்டு, சம்பல் ஜமா மசூதி மற்றும் மாவட்டத்தில் உள்ள பத்து மசூதிகளை மூடுமாறு சம்பல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, மசூதிகள் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளன. மத நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும், இரு சமூகத்தினரும் தங்கள் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது. ஷாஹி ஜமா மசூதி முகலாய காலத்தில் இடிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலின் மீது கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு அங்கு ஒரு ஆய்வு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Uttar Pradesh: Before Holi, around 67 mosques in Shahjahanpur are covered with tarpaulin to ensure that no one throws colors on them and disrupts the atmosphere.
— IANS (@ians_india) March 11, 2025
In Shahjahanpur, a unique tradition of "Joote Maar Holi" (Shoe-Hitting Holi) is celebrated, and a procession nearly… pic.twitter.com/ZmnuAzVwbw
தொழுகை நேரம் மாற்றம்
ஹோலி மற்றும் ரம்ஜானின் இரண்டாவது ஜும்மா ஆகிய இரண்டுமே இன்று ஒரே நாளில் வருவதே இந்த பரபரப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்நிலையில், ஹோலி மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகைகளை ஒரே நாளில் நடத்துவதற்கான ஆலோசனையின் பேரில், இந்திய இஸ்லாமிய மையம் தொழுகை நேரத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, தொழுகை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாக்கள் என்பதே உறவுகள் அனைவரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வதோடு, வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையை போற்றுவதற்கே ஆகும். ஆனால், ஒரு விழாவை கொண்டாடுவதற்கே இத்தனை கெடுபிடிகள் ஏற்பட்டு இருப்பது, விழாவின் சாராம்சத்தையே கெடுக்கும் வகையில் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவிக்கின்றனர்.





















