Gayle To Rohith Sharma | கெயில் டூ ரோஹித் சர்மா : T20 உலகக்கோப்பையின் சிக்சர் மன்னர்கள்..!
இதுவரை நடைபெற்றுள்ள டி20 உலகக் கோப்பைகளில் அதிகமாக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் யார் யார் தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. முதல் சுற்றிலிருந்து 4 அணிகள் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்தச் சுற்று போட்டிகள் மிகவும் விறு விறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய உள்ளிட்ட அணிகளுக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி இரண்டு பயிற்சி போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சூழலில் இதுவரை நடைபெற்றுள்ள டி20 உலகக் கோப்பைகளில் அதிகமாக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் யார் யார் தெரியுமா?
ரோகித் சர்மா (24):
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை முதல் விளையாடி வருகிறார். அவர் தற்போது வரை 25 இன்னிங்ஸில் விளையாடி 24 சிக்சர்களை விளாசியுள்ளார். அத்துடன் அவர் 673 ரன்களை அடித்துள்ளார். மேலும் 59 பவுண்டரிகளை விளாசியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகேலா ஜெயவர்தனே(25):
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே டி20 உலகக் கோப்பையில் 31 இன்னிங்ஸில் விளையாடி 25 சிக்சர்களை விளாசியுள்ளார். அத்துடன் 111 பவுண்டரிகள் அடித்து அதிக பவுண்டரி அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். அத்துடன் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரரும் இவர் தான்.
டிவில்லியர்ஸ்(30):
தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபிடிவில்லியர்ஸ். மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் இவர் மைதானத்தில் நான்கு பக்கங்களிலும் சிக்சர் அடிப்பதில் வல்லவர். இவர் டி20 உலகக் கோப்பையில் 29 இன்னிங்ஸில் விளையாடி 30 சிக்சர்களை விளாசியுள்ளார். அத்துடன் 51 பவுண்டரிகளையும் அடித்துள்ளார்.
ஷேன் வாட்சன்(31):
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன். இவர் டி20 உலகக் கோப்பையில் 22 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 31 சிக்சர்கள் விளாசியுள்ளார். அத்துடன் 41 பவுண்டரிகளையும் இவர் அடித்துள்ளார்.
யுவராஜ் சிங்(33):
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இவர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி உலக சாதனை படைத்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கிட்டதட்ட சரி சமமாக பவுண்டரி மற்றும் சிக்சர்கள் விளாசிய ஒரே வீரர் இவர் தான். 28 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 33 சிக்சர்களையும், 38 பவுண்டரிகளையும் இவர் அடித்துள்ளார்.
கிறிஸ் கெயில்(60):
இந்தப் பட்டியலில் இருக்கும் மற்ற வீரர்களைவிட கிட்டதட்ட இரண்டு மடங்கு அதிகமான சிக்சர்களை விளாசியுள்ளவர் இவர் தான். யுனிவர்சல் பாஸ் எப்போதும் சிக்சர்கள் அடிப்பதிலும் பாஸ் தான். இவர் 26 டி20 உலகக் கோப்பை இன்னிங்ஸில் விளையாடி 60 சிக்சர்கள் விளாசியுள்ளார். மேலும் 75 பவுண்டரிகளையும் அடித்துள்ளார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சிக்சர் மன்னனாக தொடர்ந்து கிறிஸ் கெயில் வலம் வருகிறார்.
மேலும் படிக்க:உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் இவர்தான்.. இந்த சாதனை புதுசு..