TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: தமிழ்நாட்டின் 2025-26 ஆண்டுக்கான பட்ஜெட்டை , நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார்

தமிழ்நாடின் 2025-2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாட்டின் ஆண்டு நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல்:
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே, இன்று மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டின் ஆண்டு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
வேளாண் பட்ஜெட்
மேலும் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கை சட்டப்பேரவையில் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் வரவு எவ்வளவு வரும், எவ்வளவு செலவு செய்யப்படும், எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும், எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும், கடன்கள் நிலைகுறித்தும் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகும். இதனால், பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Also Read: இஸ்ரோவின் SPADEX திட்டம் வெற்றி: விண்வெளியில் பறக்க தயாராகும் மனிதன்!
ரூபாய் இலச்சினை சர்ச்சை:

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில், இந்திய ரூபாயின் குறியீடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறியீடுக்கு (₹) பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், ரூபாய் இலச்சினை சர்ச்சையும் நெருப்பாய் பற்றி எரிந்து வருகிறது.





















