WTC Finals: IND vs NZ: 'விட்றாதீங்க தம்பி.. விட்றாதீங்க…'' சண்டை செய்யணும், டிரா செய்யணும்!
நேற்றே முக்கியமான இரண்டு விக்கெட்டுகளையும் இழந்திருந்த இந்திய அணிக்கு, இன்றைய ரிசர்வ் நாள் ஆட்டமும் சொதப்பலாகவே தொடங்கியுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் மழையால் கைவிடப்பட, இரண்டாவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் பாதியிலேயே தடைபட, மூன்றாவது நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியிருந்தது. நான்காவது நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கிட்டதால், ஒரு பந்துகூட வீசமுடியாத சூழலில் ஆட்டம் கைவிடப்பட்டது.
ஐந்தாவது நாள் மட்டும் விறுவிறுப்பாக இருந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி, 32 ரன்கள் முன்னிலை பெற்று களத்தில் இருந்தது. நேற்றே முக்கியமான இரண்டு விக்கெட்டுகளையும் இழந்திருந்த இந்திய அணிக்கு, இன்றைய ரிசர்வ் நாள் ஆட்டமும் சொதப்பலாகவே தொடங்கியுள்ளது.
Jamieson strikes again, scalping the wicket of Pujara for 15!
— ICC (@ICC) June 23, 2021
What a spell from the @BLACKCAPS pacer 💪
🇮🇳 are 72/4, leading by 40 runs. #WTC21 Final | #INDvNZ | https://t.co/BZuCLr1LgB pic.twitter.com/arrD2oQP7n
டிரா செய்வதையாவது உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி
ஜாமிசன் வீசிய துல்லிய பந்துகளால் கோலி, புஜாரா என இரண்டு முக்கிய விக்கெட்டுகள் போட்டியின் தொடக்கத்திலேயே சரிந்தன. இது இந்திய அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துணை கேப்டன் ரஹானேவும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். முதல் இன்னிங்ஸில் சொதப்பியது போல, இந்த இன்னிங்ஸ்லையும் தவறான ஷாட் விளையாட நினைத்து முக்கியமான நேரத்தில் அவுட்டாகியுள்ளார்.
ரிசர்வ் நாள் போட்டி தொடங்கிய முதல் செஷனில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளதால், களத்தில் இருக்கும் வீரர்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்து விளையாடுவது மிக முக்கியமானதாக உள்ளது. களத்தில் நின்று ரன்களை சேர்த்தால் மட்டுமே இந்தியாவை காப்பற்ற முடியும்.
டிராவால் யாருக்கு சாதகம்?
இன்றைய ரிசர்வ் நாள் ஆட்டத்தில் 98 ஓவர்கள் வீசப்படும். முதல் ஐந்து நாட்களில் வெறும் 225 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிடாத பட்சத்தில் 98 ஓவர்களும் வீசப்படலாம். இந்நிலையில், இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று டிக்ளேர் செய்தால் போட்டி டிரா ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஒரு வேளை போட்டி டிரா அல்லது சமனில் முடிந்தால், இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. முடிவு டிராவானால், கோப்பையை பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி வெற்றியாளர் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு வழங்க இருக்கும் பரிசுத்தொகையின் மொத்த பணத்தை இரு அணிகளுக்கும் சமமாக பங்கிட்டு அளிக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, 1.6 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 12 கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே போல, இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகை இரு அணிகளுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
”உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டினு ஒன்னு நடக்குதா அப்பப்போ ஞாபகப்படுத்துங்க” என கதறும் அளவிற்கு சொதப்பலான டெஸ்ட் இறுதி போட்டியாக முடிந்துவிடாமல் நான்காது நாள் ஆட்டம் போட்டிக்கு உயிர் கொடுத்துள்ளது. ரிசர்வ் நாளான இன்றைய போட்டியின் இரண்டாவது செஷனை டிராவுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாட வேண்டும்.