IND vs NZ, WTC 2021: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்திய அணி தவறிவிட்ட 5 மொமெண்ட்ஸ்!
ஒட்டு மொத்தத்தில் இந்திய அணியை விட அணைத்து அம்சங்களிலும் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டது என்றாலும், தோல்விக்கு இந்திய அணியின் சில தவறான முடிவுகளும் காரணம்.
இரண்டரை ஆண்டு காலம் சிறப்பாக விளையாடி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு 5 முக்கியமான காரணங்கள்...
3 வேகம் - 2 சுழல் என்னும் பந்துவீச்சு கூட்டணி
சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர்களை கூட களமிறக்காமல், ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. ஆனால் இந்திய அணியோ 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என்னும் வியூகத்தை நம்பியது. இந்திய அணி ஜூன் 18ஆம் தேதி போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னரே 11 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது. ஆனால் ஜூன் 18ஆம் தேதி மழை பெய்து டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது, அங்கு தான் பிரச்சனை. மழை, மூடிய வானம் என நிலைமையோ வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க, முதல் நாள் போட்டியும் தொடங்காத நிலையில், அணியை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ள விராட் கோஹ்லிக்கு போதிய கால அவகாசம் இருந்தது. பல கிரிக்கெட் வல்லுனர்களும் இந்திய அணி அறிவித்த பிளேயிங் 11ல் நிச்சயம் மாற்றம் இருக்கும் என நம்பினர். ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து கோஹ்லி பின் வாங்க மறுத்தார், இங்கே கூடுதலாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளரை ஆட வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இங்கே குறிப்பிடப்படுவதில் பலருக்கு இங்கே ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் வெறும் 15.2 ஓவர் வீசுவதற்கு, ஒரு சுழற்பந்து வீச்சாளரை இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறக்கியுள்ளது. ஜடேஜாவை பொருத்தவரை எப்போதுமே சிறப்பான ஃபீல்டர், ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், அவரை ஒரு முழுமையான பேட்ஸ்மேன் அல்லது முழுமையான பவுலர் என இரண்டு வகையிலுமே கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் இந்த இடத்தில் ஜடேஜாவை சரியாக பயன்படுத்த கோஹ்லியும் தவறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். ஜடேஜாவிற்கு பேட்டிங்கில் Agressor ரோல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதே நேரம் பவுலிங்கில் defensive ரோல் கொடுக்கப்பட்டு ரன்களை கட்டுப்படுத்த அவரை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இறுதியில் ஜடேஜா ரன்கள் அடிக்கவும் தவறினார், ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் எடுக்கவும் தவறிவிட்டார். (நியூசிலாந்து பந்துவீச்சாளர் சவுதி விக்கெட் மட்டும் எடுத்தார்)
ஜஸ்பிரீத் பும்ரா
கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா ஜொலிக்க தவறி விட்டார் என்பது தான் உண்மை. முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், 2 இன்னிங்ஸ் பந்துவீசிய பும்ராவால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை என்பது அவருக்கே ஏமாற்றமாக- இருந்திருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை விக்கெட் வீழ்த்த முடியவில்லை என்றாலும், maintaining the pressure என்று சொல்லுவார்கள். தொடர்ந்து அழுத்த கொடுக்கும் வகையில், ரன்களை வாரி கொடுக்காமல், அதே நேரம் பந்துவீச்சு மூலம் கேள்விகளை எழுப்பி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தானாகவே விக்கெட் விழும் என்பதுதான் பொதுவான வியூகம். ஆனால் முகமது சமி, இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் தொடர்ந்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த, பும்ரா pressure ரிலீஸ் பாயிண்டாக அமைந்தார். முதல் இன்னிங்சில் 26 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட கைப்பற்ற பும்ராஹ்வால் முடியவில்லை. 2வது இன்னிங்ஸ் பந்துவீச தொடங்கிய இந்திய அணியின் நியூ பால் பும்ராஹ்விடம் கொடுக்கபடாமல், கேப்டன் கோஹ்லி ஷமியை அழைத்ததே பும்ராஹ் மீதான நம்பிக்கையை கோஹ்லி இழந்துவிட்டார் என காட்டிய மிகப்பெரிய தருணம். சில இடங்களில் பும்ராஹ்விற்கு அதிர்ஷ்டமும் கைகொடுக்கவில்லை என்பதில் மாற்று கருத்தில்லை, ஆனால் மொத்தத்தில் ஜஸ்பிரித் பும்ரா தன்னுடைய டெஸ்ட் வாழ்க்கையில் மறக்க வேண்டிய ஒரு போட்டி இது.
டைல் என்டர் பேட்டிங்
இதுபோன்ற பேட்டிங்கிற்கு சாதகமான சூழல் இல்லாத ஆடுகளங்களில், டைல் என்டர் என சொல்லப்படும் இறுதி வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைத்து நிற்பது, சில ரன்களை சேர்ப்பது முடிவில் மிக பெரிய ஒரு மாற்றத்தை கொண்டு வரும். இந்திய அணியின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் அதை செய்யவில்லை, அதே நேரம் நியூசிலாந்து அணியின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தவும் இல்லை. இந்திய அணியின் முதல் இன்னிங்சில் 182 ரன்கள் 6 விக்கெட் என்றிருந்த போது, அடுத்த 35 ரன்களில் இந்தியா ஆல்-அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் 142 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் இருந்த இந்திய அணி அடுத்த 28 ரன்களில் சுருண்டது. அதேநேரம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் கடைசி 4 விக்கெட்டிற்கு 87 ரன்கள் சேர்த்தது, இந்த இடத்தில் தான் இந்தியா போட்டியை நழுவ விட்டுவிட்டது என்றே சொல்லலாம்.
ஒட்டுமொத்த இந்திய அணியின் பேட்டிங் சொதப்பல்
இதுபோன்ற பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில், எந்த ஒரு வீரருக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கிறதோ அவர் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆட வேண்டும். ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஒருவர் கூட அதை செய்யவில்லை. ரோஹித் 34, கில் 28, கோஹ்லி 44, ரஹானே 49 என நல்ல ஸ்டார்ட் கிடைத்தும் அதை பெரிய ஸ்கோராக மாற்ற இந்திய அணி வீரர்கள் தவறிவிட்டனர். மேலும் புஜராவின் over defensive approach உம் பலன் கொடுக்கவில்லை. குறிப்பாக நல்ல செட்டிலான பேட்ஸ்மேன் ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோர் மோசமான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்தது மிக வேதனையான விஷயம். இறுதியில் ஒரு வீரர் கூட இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஒரு அரைசதம் கூட அடிக்காத நிலையில், நியூசிலாந்து அணியின் இரண்டு வீரர்கள் அரைசதம் கடந்தனர்.
இப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை பல்வேறு நிலைகளில் தவற விட்ட இந்திய அணி, அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் நடக்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சில தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.