இந்தியன் லீக் கால்பந்து தொடருக்கு தேர்வானார் இன்பன் உதயநிதி !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனான இன்பன் உதயநீதியை, மணிப்பூரை சேர்ந்த கால்பந்து அணி ஐ-லீக் கால்பந்து தொடருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
![இந்தியன் லீக் கால்பந்து தொடருக்கு தேர்வானார் இன்பன் உதயநிதி ! I-League team Neroca FC signs's Inban udhayanidhi grandson of Tamilnadu CM MK Stalin இந்தியன் லீக் கால்பந்து தொடருக்கு தேர்வானார் இன்பன் உதயநிதி !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/26/87fce9fdfa09dd60b63bf1e6a1347a7e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியன் ஐ-லீக் கால்பந்து தொடர் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிகவும் முக்கியமான தொழிற்முறை கால்பந்து தொடர் இதுவாகும். இதில் தற்போது 21 கிளப் அணிகள் பங்கேற்று வருகின்றன. 2020-21ஆண்டிற்கான ஐ-லீக் தொடரை கோகுலம் கேரளா எஃப்சி அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஐ-லீக் தொடருக்கான வீரர்கள் ஒப்பந்தம் செய்யும் படலம் தற்போது நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணி தமிழ்நாட்டு முதலமைச்சரின் பேரனும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நெரோகா அணியின் வீரர்கள் தேர்விற்கான ட்ரையல்ஸில் இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்பன் உதயநிதி கால்பந்து விளையாட்டில் டிஃபெண்டராக இருந்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
View this post on Instagram
நெரோகா எஃப்சி அணி 2015-16-ஆம் ஆண்டு இரண்டாவது டிவிஷன் கால்பந்து லீக் தொடரில் விளையாடி வந்தது. 2016-17-ஆம் ஆண்டு இரண்டாவது டிவிஷன் லீக் தொடரை வென்று ஐ-லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றது. இந்தக் கால்பந்து கிளப்பின் தலைமையிடம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது. இந்த அணி 2020-21-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ-லீக் தொடரில் கடைசி இடம்பிடித்தது.
இதனால் அடுத்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. மேலும் தன்னுடைய அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் புதிதாக வீரர்களையும் தேடி ஒப்பந்தம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இன்பன் உதயநிதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ‛சச்சினுக்கு போன் போடு...’ கோலிக்கு அட்வைஸ் வழங்கிய கவாஸ்கர்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)