America Vs Canada: பழிக்குப் பழி.. வரிக்கு வரி.. அமெரிக்காவிற்கு ஆப்படித்த கனடா...
கனடா மீதான கூடுதல் வரி விதிப்பை ட்ரம்ப் உறுதி செய்துள்ள நிலையில், அதற்கு தக்க பதிலடியை கனடா கொடுத்துள்ளது. அது என்ன என்று பார்க்கலாம்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற உடன் பல அதிரடிகளை அரங்கேற்றினார் டொனால்ட் ட்ரம்ப். அதில் முக்கியமான ஒன்று, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரியை விதிக்கப்போவதாக அறிவித்தது. இந்நிலையில், தற்போது கனடா மீதான வரி விதிப்பை அவர் உறுதி செய்துள்ள நிலையில், அதற்கு கனடாவும் பதிலடி கொடுத்துள்ளது.
வரி விதிப்பை அமல்படுத்திய ட்ரம்ப்
இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில், கனடா, மெக்சிகோ நாடுகள், அமெரிக்காவில் சட்விரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவைகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒரு மாத காலத்தில் அதற்கான திட்டத்தை அளிக்க வேண்டும் என அவகாசம் கொடுத்து, வரி விதிப்பை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த சூழலில், அந்த ஒரு மாத கால அவகாசம் முடிந்த நிலையில், நேற்று(03.03.25) அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 25 சதவீத வரி விதிப்பு, நாளை(04.03.25) முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். அதன்படி, இன்று முதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதேபோல், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான 10 சதவீத கூடுதல் வரி, அதாவது 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையும் இன்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது.
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த கனடா
இந்த நிலையில், அமெரிக்கா விதித்துள்ள வரிக்கு, பதில் வரியாக, அதாவது பழிவாங்கும் நடவடிக்கையாக, கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு 2 கட்டமாக வரி விதிப்பை அறிவித்துள்ளது. அது குறித்து பேசியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்காவின் நியாயமற்ற முடிவுக்கு கனடா பதிலளிக்காமல் விடாது என்று கூறியுள்ளதோடு, அமெரிக்க அரசின் வரிவிதிப்பு அமலுக்கு வரும் அதே நேரத்தில், கனடா அமெரிக்கா மீது விதிக்கும் 25 சதவீத வரியும் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
மொத்தமாக, அமெரிக்காவின் 155 பில்லியன் டாலர்கள் அளவிற்கான பொருட்கள் மீது வரி விதிக்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாக வரி விதிப்பு அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 125 பில்லியன் டாலர்கள் அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பு, 21 நாட்களுக்குப்பின் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் ட்ரூடோ. அமெரிக்க வரி விதிப்பு அமலில் இருக்கும் வரை, தங்களது வரி விதிப்பும் அமலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கனடா மீதான வரி விதிப்பு, அமெரிக்காவில் எரிவாயு, மளிகை பொருட்கள், கார் உள்ளிட்டவைகளின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிடும் என்றும், ஏராளமானோர் வேலை இழக்கும் நிலையும் ஏற்படும் என்பதால், வரி விதிப்பை திரும்பப் பெறுவது குறித்து ட்ரம்ப் யோசிக்க வேண்டும் என்றும் கனடா பிரதமர் ட்ரூடோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, மெக்சிகோ மீதான வரி விதிப்பையும் ட்ரம்ப் உறுதி செய்துள்ளதால், மெக்சிகோவும் விரைவில் பதில் வரி குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

