Supriti Kachhap: அன்று சல்லடையாக துளைக்கப்பட்ட அப்பாவின் உடல்! இன்று சாதனை படைத்த மகள்! தங்க மகளின் கதை!
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. மனத் தடையைத் தவிர வெற்றிக்கு வேறேதும் தடையல்ல என்பார்கள் சான்றோர். அதை நிரூபித்து தங்கப் பதக்கத்துடன் மிளிர்கிறார் இந்தியாவின் இளைய மகள் ஒருவர்.
சுப்ரிதி கச்சாப். இதுதான் அந்த வெற்றி மங்கையின் பெயர். இவரது சொந்த ஊர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா மாவட்டம். இவரது தந்தை ராமேஷ்வக் ஓரான் நக்சல்களால் படுகொலை செய்யப்பட்டார். சுப்ரிதியின் தாய் பல்மதி தேவி, கண்ணீர் மல்க கோரக் கதையை நினைவு கூர்ந்தார். 2003 ஆம் ஆண்டு ஒரு நாள் மருத்துவரான எனது கணவர் அருகில் உள்ள கிராமத்தில் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கச் சென்றார். அவருடன் மேலும் 4 பேரும் சென்றிருந்தனர். ஆனால் மறுநாள் அவர்கள் யாருமே வீடு திரும்பவில்லை. நான்கு பேரும் வனப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தனர். உடலில் புல்லட்டுகள் பாய்ந்திருந்தன. எங்கள் வாழ்க்கையே இருண்டு போனது. ஆனால் இன்று மீண்டு வந்துள்ளோம் என்றார்.
கேலோ இந்தியாவில் தங்கம்:
நாடு முழுவதும் உள்ளடக்கும் விதமாக கேலோ இந்தியா திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி நாடு முழுவதும் திறமைமிக்க வீரர்கள் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி சர்வதேச போட்டிகளில் அவர்கள் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரத்தை அடிமட்ட அளவிலிருந்து புதுப்பிக்க இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
4 வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 4 முதல் தொடங்கியது. ஜூன் 13 வரை ஹரியானா மாநிலத்தில் நடைபெறுகிறது. 4வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 8500 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
சுப்ரிதியின் சாதனை:
4 வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சுப்ரிதி கச்சாப். 3000 மீட்டர் மகளிருக்கான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். இவர் பந்தய தூரத்தை 9 நிமிடங்கள் 46.14 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதற்கு முன்பும் இப்போட்டியில் இவரே வெற்றி பெற்றிருந்தார். அப்போது இவர் 9 நிமிடங்கள் 50.54 விநாடிகளில் வென்றிருந்தார். தனது சொந்த சாதனையை சுப்ரிதி தற்போது முறியடித்துள்ளார். அவருடைய வேகம், சர்வதேச அரங்கில் இந்தியா சார்பில் அவரை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரச் செய்வதாக பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனந்தக் கண்ணீர் சிந்திய தாய்:
சுப்ரிதியின் தாய் தனது மகளின் வெற்றி குறித்து அளித்த பேட்டியில், என் கணவர் இறந்தபோது என் மகள் நடக்கக் கூட தெம்பில்லாமல் துவண்டு போயிருந்தார். இன்று ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றிருக்கிறார். அவரது தந்தை இருந்திருந்தால் இந்த வெற்றியைக் கண்டு பூரித்திருப்பார். அவள் ஊர் திரும்பியதும் எங்கள் கிராமத்தில் உள்ள வீட்டில் இந்த பதக்கத்தை வைப்போம் என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக்ச கூறினார்.