கெயில் டூ மில்லர்- ஐபிஎல் தொடரின் டாப்-5 சூறாவளி இன்னிங்ஸ்
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தனது மின்னல் வேக ஆட்டத்தின் மூலம் டிவில்லியர்ஸ் ஆட்டத்தில் அனல் பறக்க வைத்தார். இந்தச் சூழலில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கண்ட டாப்-5 சூறாவளி ஆட்டங்கள் என்னென்ன? இதோ பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் தனது சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தி டிவில்லியர்ஸ் அசத்தினார். ஒரு கட்டத்தில் திணறி கொண்டிருந்த பெங்களூரு அணியை இவரின் ஆட்டம் மீட்டது. அதிரடியாக விளையாடிய டிவில்லியர்ஸ் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கண்ட டாப்-5 சூறாவளி ஆட்டங்கள் என்னென்ன?
5. டேவிட் மில்லர் (2013):
2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி கெயில்,புஜாரா ஆகியோரின் அரை சதத்தால் வலுவான ஸ்கோரை எட்டியது. இறுதிக் கட்டத்தில் டிவில்லியர்ஸ் அதிரடி காட்ட பெங்களூரு அணி 190 ரன்கள் விளாசியது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்கம் முதல் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தது. இதனால் 10 ஓவர்களுக்குள் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழந்து 64 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 10 ஓவர்களில் 127 ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் பஞ்சாப் அணியின் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி சிக்சர் மற்றும் பவுண்டரி மழை பொழிந்தார். 7 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகளின் உதவியுடன் 38 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் 3ஆவது அதிவேக சதம் அடித்து மில்லர்(101*) பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தார்.
4. யூசஃப் பதான்(2010):
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சச்சின் தலைமையிலான மும்பை அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் விளாசியது. இதனால் மும்பை இந்தப் போட்டியை எளிதில் வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப ராஜஸ்தான் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதனைத்தொடர்ந்து களத்தில் இருந்த யூசஃப் பதான் அதிரடி காட்ட தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார். 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் உதவியுடன் 37 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட 2ஆவது அதிவேக சதம் இதுவாகும். எனினும் யூசஃப் பதான் 18ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
3. மெக்கலம் (2008):
முதலாவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக மெக்கலம் களமிறங்கினார். இவர் பெங்களூரு அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.
இந்தப் போட்டியில் 10 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்சர்கள் உதவியுடன் 73 பந்துகளில் 158* ரன்கள் விளாசினார். ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை முதல் போட்டியிலேயே அடித்து மாபெரும் சாதனைப் படைத்தார். ஐபிஎல் தொடருக்கு இதுவே பெரிய துவக்கமாக அமைந்தது.
2. டிவில்லியர்ஸ்(2016):
2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் பெங்களூரு அணிக்கு சிறப்பானதாக அமைந்தது. ஏனென்றால் அந்தத் தொடரில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் அதிரடி காட்டி வந்தனர். அந்தவகையில் குஜராத் லையன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
அப்போது அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதன்பின்னர் இரண்டாவது விக்கெட்டிற்கு கோலியும் டிவில்லியர்ஸூம் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் குஜராத் பந்துவீச்சாளர்களை கலங்க வைத்தனர். ஒரு புறம் விராட் கோலி அதிரடி காட்ட மற்றொரு புறம் ஏபிடி தனது 360 டிகிரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதம் கடந்து அசத்தினர். விராட் கோலி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து 229 ரன்கள் அடித்தனர். டிவில்லியர்ஸ் 52 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 12 சிக்சர்களுடன் 129* ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது.
1. கிறிஸ் கெயில்(2013):
டி20 வரலாற்றில் யுனிவர்ஸ் பாஸ் என்றால் அது நம்ம கிறிஸ் கெயில் தான். ஐபிஎல் தொடரிலும் இவர் தான் ஆக சிறந்த அதிரடி மன்னன். 2013ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் கிறிஸ் கெயில் தொடக்கம் முதல் அதிரடி காட்டினார்.
இப்போட்டியில் அசத்தலாக விளையாடிய கிறிஸ் கெயில் லைவ் போட்டியை ஒரு ஹைலைட்ஸ் போல் மாற்றினார். பந்துகளை பவுண்டரிக்கு எளிதாக விரட்டி கொண்டிருந்தார். 66 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்சர்கள் விளாசி 175* ரன்கள் குவித்தார். இவர் அடித்த மொத்த ரன்களில் 154 ரன்கள் பவுண்டரிகள் மூலம் வந்தது. மேலும் 30 பந்துகளில் சதம் கடந்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் என்ற சாதனையையும் கிறிஸ் கெயில் படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் தற்போது வரை இந்தச் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.