Under-16 SAFF Football: வா வந்தா.. வங்கதேசத்துக்கு எதிராக முரட்டுத்தனமாக இரண்டு கோல்.. இறுதிப்போட்டியில் சாம்பியனான இந்தியா!
இந்தியாவின் 16 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி, SAFF 16 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்தியாவின் 16 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி, SAFF 16 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 16 வயதுக்குட்பட்ட இந்திய அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SAFF 16 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் தொடக்கம் முதலே, ஆட்டத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் வெளிப்பட்டது. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் பாரத் லேயர்ஜாம் இந்திய அணிக்கு முதல் கோலை அடித்தார். இது வங்கதேச கோல்கீப்பர் முகமது நஹிதுல் இஸ்லாமின் கால்களுக்கு இடையில் சென்று கோலாக மாறியது. தலைமைப் பயிற்சியாளர் இஷ்பாக் அகமதுவின் வழிகாட்டுதலின் பேரில், முதல் பாதி முழுவதும் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் தற்காத்து வந்தனர். முதல் பாதி முடிவில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியையும் அதே விறுவிறுப்புடன் இந்தியா தொடங்கியது. இதன்பின், 73வது நிமிடத்தில் லீவிஸ் ஜங்மினாலம், இந்திய அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார். இதன்மூலம், முழு போட்டி நேர முடிவில் இந்திய அணி வங்கதேச அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியது.
இந்திய லெவன்: அஹெய்பம் சூரஜ் சிங், மேட் ங்கம்கௌஹூ, கரிஷ் சோரம், முகமது கைஃப், லெவிஸ் சாங்மின்லுன், எம்டி அர்பாஷ் (மன்பகுபர் மல்ங்கியாங், 83'), பாரத் லைரெஞ்சம் (ஐபோர்லாங் கர்தாங்மாவ், 90'), விஷால் சிங் யாதவ், (83'), அஹோங்ஷாங்பாம் (ரிஷி சிங் நிங்தௌக்ஹோங்ஜாம், 90'), யாய்பரெம்பா சிங்ககம், தூங்கம்பா சிங் உஷாம்.
பரிசளிப்பு விழாவில் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:
சிறந்த கோல்கீப்பர்: சூரஜ் சிங்
மிகவும் மதிப்புமிக்க வீரர் (எம்விபி) மற்றும் அதிக கோல் அடித்தவர்: முகமது அர்பாஷ்
The moment we all have been waiting for!! CHAMPIONS 🎉#INDBAN ⚔️ #U16SAFF2023 🏆 #BlueColts 🐯 #IndianFootball ⚽ pic.twitter.com/B4Ngatn8m1
— Indian Football Team (@IndianFootball) September 10, 2023
SAFF சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி:
SAFF சாம்பியன்ஷிப்பில் இந்திய 16 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரையிறுதி ஆட்டத்தில் மாலத்தீவை 8-0 என்ற கணக்கில் ஒருதலைப்பட்சமாக வென்றதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு இடம்பிடித்தது. இந்தப் போட்டியில் எப்ரோலாங் மற்றும் மொஹமட் அர்பாஷ் ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்திருந்தனர். இந்தப் போட்டி பூடான் நடத்தும் திம்புவில் நடைபெற்றது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சிறப்பான தொடக்கத்தை பதிவு செய்தது.
Absolute scenes in Thimphu 😍🇮🇳🏆 #IndianFootball pic.twitter.com/x5ry37YJ3S
— 90ndstoppage (@90ndstoppage) September 10, 2023
ஏ பிரிவில் இந்தியா முதலிடம்:
SAFF 16 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றது. இதில், வங்கதேசம், நேபாளம் அணிகளுக்கு எதிராகப் போட்டியிட்ட இரு அணிகளையும் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடத்தைப் பிடித்தது. இதன் பின்னர் அரையிறுதியில் மாலைதீவு அணியை 8-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. மறுபுறம், போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் மற்றும் இறுதிப்போட்டி என இரண்டு போட்டிகளிலும் வங்கதேச அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.