India vs Kuwait Football: இந்திய அணி வீரரே போட்ட சேம் சைடு கோலால் குவைத் உடனான ஆட்டம் டிரா… சுனில் சேத்ரியின் 92வது சர்வதேச கோல் வீன்!
ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்தியா மற்றும் குவைத் ஆகிய இரு அணிகளும் இந்த ஆட்டத்தை ஜாலியாக ஆடி பார்வையாளர்களுக்கு பல பொழுதுபோக்கு தருணங்களை அளித்தன.
நேற்று (செவ்வாய்) நடந்த SAFF சாம்பியன்ஷிப்பில், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி தனது மேஜிக்கைச் செய்தும், இந்தியா தனது கடைசி க்ரூப் போட்டியில், குவைத் அணிக்கு எதிராக 1-1 என்ற கணக்கில் டிரா செய்ததால், புள்ளிகளை பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.
டிரா ஆன போட்டி
சுனில் சேத்ரி முதல் பாதியில் கிடைத்த கூடுதல் நிமிடத்தில் அதிரடியாக ஒரு கோல் அடித்ததன் மூலம், இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார், ஆனால் இரண்டாவது பாதியின் கூடுதல் நேரத்தில் இந்திய அணி வீரரான அன்வர் அலியே எதிரணி கோல் போஸ்டில் கோல் போட (Own Goal) இந்திய அணியின் வெற்றி பறிபோனது. கடந்த ஒன்பது போட்டிகளில் இந்தியா அடித்த முதல் சேம் சைடு கோல் இதுவாகும். இதன் விளைவாக இந்தியா மற்றும் குவைத் ஆகிய இரு அணிகளும் ஏழு புள்ளிகளுடன் குரூப் போட்டிகளை முடித்தன.
புள்ளிப்பட்டியல்
குவைத் அணி, கோல் சராசரி இந்தியாவை விட அதிகமாக வைத்திருந்ததால், குரூப் ஏ-வில் முதல் இடத்தை பிடித்தது. அரையிறுதியில் இந்தியா லெபனானையும், குவைத் பங்களாதேஷ் அல்லது மாலத்தீவுகளையும் எதிர்கொள்ள இருக்கிறது. ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இந்தியா மற்றும் குவைத் ஆகிய இரு அணிகளும் இந்த ஆட்டத்தை ஜாலியாக ஆடி பார்வையாளர்களுக்கு பல பொழுதுபோக்கு தருணங்களை அளித்தன.
இரு அணிகளுக்கும் கிடைத்த வாய்ப்புகள்
முன்னதாக ஆறாவது நிமிடத்தில் இந்திய அணி ஏறக்குறைய ஒரு கோலுக்கு அருகில் சென்றனர், ஆனால் ஆகாஷ் மிஸ்ரா தந்த பாஸை, சேத்ரி சரியாக கனெக்ட் செய்ய தவறிவிட்டார். அதே போல 20வது நிமிடத்தில் குவைத் அணிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் பாக்ஸிற்கு சற்று வெளியே இருந்து ஷதாப் அல் கால்டி அடித்த ஷாட், போஸ்டுக்கு சற்று மேலே சென்றது. அதே போல குவைத் அணிக்கு, 35 வது நிமிடத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அனிருத் தாபா கார்னரில் இருந்து அன்வர் அலியிடம் அடிக்க, அவர் தலையால் அடிக்க முயற்சி செய்தார், ஆனால் திசை மாறிய பந்து வெளியே சென்றது.
அடிக்கப்பட்ட கோல்கள்
முதல் பாதியில் காயம் காரணமாக வீணான நேரங்களுக்கு ஈடாக கொடுக்கப்பட கூடுதல் நேரத்தில் இந்திய அணி கடுமையாக முயற்சி செய்தது. அதற்கு கிடைத்த பலன் தான் முதல் கோல். தாபா வலது பக்கத்திலிருந்து ஒரு கார்னர் கிக்கை கொடுக்க, சேத்ரி குவைத் கோல்கீப்பர் அப்துல் ரஹ்மான் நெருங்க முடியாதபடி அதனை கோல் போஸ்ட் உள்ளே தள்ளினார். இது மூன்று போட்டிகளில் சேத்ரியின் ஐந்தாவது கோல் மற்றும் 26 SAFF சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 24 வது கோலாகும். எதிரணி வீரர்கள் அவர்கள் கோல் போஸ்ட் பக்கம் பந்தை வேகமாக எடுத்து வர, வலது புறம் இருந்து குவைத் வீரர் பந்தை பாக்ஸிற்குள் அடிக்க, அங்கு நின்ற இந்திய வீரர் அன்வர் அலி அதனை மைதானத்திற்குள் தள்ள முயற்சித்தார், அது காலின் ஓரத்தில் பட்டு, எதிரணி கோல் போஸ்ட்டிற்கு உள்ளேயே சென்று விழுந்து இந்தியாவின் வெற்றியை பறித்தது.