TN Weather Update: மீண்டும் அதிகரிக்கும் வெயில்.. 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்.. இன்று எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை, மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இருப்பினும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அதிகபட்ச வெப்பநிலை:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், மதுரையில் 39.2 டிகிரி செல்சியஸ் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து நாகையில் – 38 டிகிரி செல்சியஸ், திருச்சியில் – 38.1 டிகிரி செல்சியஸ், பரங்கிபேட்டை – 38.4 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி – 37.7 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் – 39 டிகிரி செல்சியஸ், ஈரோடு – 36.6, கரூர் பரமத்தி – 37.5, வேலூர் – 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 35.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மீனம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதுவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 5 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவானது.
அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்:
ஜூன் மாதம் முதல் வாரத்தில் எப்போதும் இல்லாத அளவு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை என்பது சுமார் 43 டிகிரி வரை இருந்தது. அதன்பின் ஜூன் 8 ஆம் தேதி அதாவது இரண்டாவது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கவே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் பூமியின் உஷ்னம் சற்று தணிந்து காணப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.
இதனால் பகல் நேரங்களில் வெளியில் செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெளியில் செல்லும் போது நல்ல நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் அல்லது நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இல்லையெனில் உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயம் ஏற்படும் என்றும் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் வெளியில் செல்வ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 1 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.