"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
டெல்லி சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் முட்டி மோதி வருகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்குவோம் என ஆம் ஆத்மி போர்க்கொடி தூக்கியுள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முட்டி மோதும் காங்கிரஸ், ஆம் ஆத்மி:
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், டெல்லி தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கியுள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், பாஜக, ஆம் ஆத்மியை விமர்சித்து 12 புள்ளி வெள்ளை அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது. இது, ஆம் ஆத்மி தலைவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. எனவே, அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்குவோம் என ஆம் ஆத்மி போர்க்கொடி தூக்கியுள்ளது.
உடைகிறதா இந்தியா கூட்டணி?
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அதிஷி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் காங்கிரஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது பேசிய சஞ்சய் சிங், "தேர்தலில் பாஜக லாபம் அடைய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.
அஜய் மக்கான் பிஜேபி ஸ்கிரிப்டைப் படித்து, பிஜேபியின் உத்தரவின் பேரில் அறிக்கைகளை வெளியிடுகிறார், மேலும், பிஜேபியின் அறிவுறுத்தலின்படி ஆம் ஆத்மி தலைவர்களை குறிவைக்கிறார். நேற்று, அவர் அனைத்து எல்லைகளையும் தாண்டி, எங்கள் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தேச விரோதி என்று அழைத்தார்.
டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். சண்டிகரில் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்தார். நாடாளுமன்றத்தில் பிரச்னைகள் வரும்போது, காங்கிரஸுடன் மீண்டும் மீண்டும் துணை நிற்கிறது ஆம் ஆத்மி கட்சி. இப்போது, எங்கள் தலைவரை தேச விரோதி என்று சொல்கிறீர்கள். கெஜ்ரிவால் மீது இளைஞர் காங்கிரஸ் வழக்கு பதிவிடுகிறது" என தெரிவித்துள்ளார்.