Anna University Issue: "ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
"போலீஸ் எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கூறி இருக்கிறார்" என அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து சென்னை கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தாக்குதலுக்கு ஆளான சம்பவத்தில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னை கமிஷனர் அருண் பரபரப்பு தகவல்கள்:
இதுதொடர்பாக இன்று பேட்டி அளித்த அவர், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது விரிவாக பேசிய காவல் ஆணையர் அருண், "புகாரில் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை அப்படியே பதிவு செய்வதுதான் FIR. வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் FIR எனும் முதல் தகவல் அறிக்கை, இணையதளத்தில் தானாகவே லாக் ஆகிதான் இருக்கும். பாதிக்கப்பட்டோரின் விபரங்களை பார்க்க முடியாது. ஆனால், IPC-யில் இருந்து புதிய சட்டங்களான BNS-க்கு மாற்றப்பட்டதால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாக் ஆவதில் சற்று தாமதம் ஆகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்:
இந்த நேரத்தில் சிலர் அதனை பதிவிறக்கம் செய்திருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கும் FIR நகல் கொடுக்கப்பட்டது. இந்த 2 இடங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் FIR லீக் ஆகியிருக்கலாம்.
FIR-ஐ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலை.யில் 70 சிசிடிவிக்கள் உள்ளன. 56 கேமராக்கள் வேலை செய்கின்றன. கைதான ஞானசேகரன் மீது திருட்டு உள்பட 20 வழக்குகள் உள்ளன. அவரால் வேறு யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறை எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆய்வுக் கூட்டங்களில் முதலமைச்சர் கூறியது. எங்களுக்கு எந்த கட்சி சார்பும் இல்லை அண்ணா பல்கலை. வளாகத்தில் 140 பேர், 3 ஷிப்டுகளாக காவலாளிகள் பணியில் உள்ளனர். வளாகத்திற்கு 11 நுழைவு வாயில்கள் உள்ளன. இன்னும் அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடக்கிறது" என்றார்.
இந்தியாவின் புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிக்கு நேர்ந்துள்ள கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே நடுங்க வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்ளேயே வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தொடர்பே இல்லாத ஒரு நபர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் நாட்டை உலுக்கியுள்ளது.
இதையும் படிக்க: அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!