அன்று எஸ்பிபி செய்த உதவி.. 37 ஆண்டுகளாக செஸ் உலகை கலக்கும் ' டைகர் ஆஃப் மெட்ராஸ்' ஆனந்த்
செஸ் உலகில் டைகர் ஆஃப் மெட்ராஸ் என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்த் இன்று தன்னுடைய 53ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
செஸ் விளையாட்டில் ஒரு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் கொடிகட்டி பறந்து வருகிறார் என்றால் அது நம் விஸ்வநாதன் ஆனந்த் தான். இவர் இன்று தன்னுடைய 53ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருடைய சிறப்புகள் என்னென்ன தெரியுமா? அவருக்கு முதன்முதலில் செஸ் போட்டிக்கு செல்ல யார் உதவினார் தெரியுமா?
விஸ்வநாதன் ஆனந்திற்கு உதவிய எஸ்பிபி:
1982-83 ஆம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் தடம் பதிக்க தொடங்கினார். அப்போது மெட்ராஸ் மாவட்ட செஸ் சங்கம் சார்பாக இந்த இளம் வீரர்களை தேசிய குழு செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது. அந்த சமயத்தில் செஸ் சங்கத்திற்கு தேவையான நிதி இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் அப்போதைய சங்க தலைவர் ஆருத்ரா பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திடம் உதவி கேட்டார். அதற்கு எஸ்பிபி நிதியுதவி வழங்கினார். அந்த உதவியுடன் களமிறங்கிய மெட்ராஸ் அணியில் விஸ்வநாதன் ஆனந்த சிறப்பாக விளையாடினார். சிறந்த வீரர் விருதையும் வென்றார். அத்துடன் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் அவர் பெற்றார். அதன்பின்னர் 1984ஆம் ஆண்டு முதல் முறையாக தன்னுடைய 15ஆவது வயதில் தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன்காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எஸ்பிபி மறைந்த போது இதை நினைவுப்படுத்தி விஸ்வநாதன் ஆனந்த் ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், “ஒரு சிறப்பான மனிதரின் மறைவு செய்தியை கேட்டு நான் மிகவும் வருத்ததில் உள்ளேன். என்னுடைய முதல் ஸ்பான்சர் எஸ்பிபி சார் தான். 1983ஆம் ஆண்டு சென்னை கால்ட்ஸ் அணிக்கு அவர் ஸ்பான்சர் செய்தார். என்னுடைய வாழ்வில் நான் சந்தித்த மிகவும் அருமையான மனிதர் அவர். அவருடைய இசை எப்போதும் ஆனந்தத்தை தந்தது. அவரது அத்மா சாந்தி அடைய வேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார்.
Really sad to hear about the passing away of such a great yet simple person. He was my first sponsor! He sponsored our team Chennai Colts in the national team championship in 1983. One of the nicest persons I have met. His music gave us such joy #RIPSPB
— Viswanathan Anand (@vishy64theking) September 25, 2020
1969ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மயிலாடுதுறையில் பிறந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். தனது தாய் சுசிலாவிடமிருந்து செஸ் விளையாட்டை விஸ்வநாதன் ஆனந்த் கற்றுக் கொண்டார். 6 வயது முதல் செஸ் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தார். 1984ஆம் ஆண்டு 15 வயதில் முதல் முறையாக தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 1988ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றார்.
அதன்பின்னர் 2000, 2007,2008,2010,2012 என 5 முறை உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். 1991ஆம் ஆண்டு வழங்கப்பட்ட முதல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை விஸ்வநாதன் ஆனந்த் வென்றார். இவை தவிர செஸ் ஆஸ்கார் சிறந்த செஸ் வீரர் என்ற பட்டத்தை 1997,1998,2003,2004,2007,2008 என ஆறு முறை வென்று அசத்தினார். இந்த விருதை 5 முறைக்கு மேல் வென்ற ரஷ்யாவை சாராத ஒரே வீரர் ஆனந்த் தான். இந்தியாவில் விளையாட்டு துறையில் மிகவும் உயரிய விருதான கேல் ரத்னா விருதை முதல் முறையாக ஆனந்திற்கு தான் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: 3 இன்னிங்ஸில் 3 சதங்கள்... தொடரும் ருதுராஜின் ருத்ரதாண்டவம்!