Golden Boot FIFA WC 2022: தலா 5 கோல்களுடன் மெஸ்ஸி-எம்பாப்பே.. ஒருவேளை சமமானால் யாருக்கு கோல்டன் பூட்?
எம்பாப்பே இறுதிபோட்டிக்கு செல்லும் முன் 5 கோல்கள் அடித்து லியோனல் மெஸ்ஸியுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். ஒருவேளை இறுதிப்போட்டி முடிந்த பின்னும் இதே நிலை தொடர்ந்தால்?
ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இன் இறுதிப் போட்டிவந்துவிட்டது… பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதும் போட்டி நாளை லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜென்டினா ஜெர்சியை லியோனல் மெஸ்ஸி கடைசியாக அணியப்போகிறார். உலகக் கோப்பையை வெல்வதற்கு மெஸ்ஸிக்கு கிடைத்த இறுதி வாய்ப்பு இதுதான். எல்லா விருதுகளும் கோப்பைகளும் குவித்து விட்ட அவருக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ள இதனை பூர்த்தி செய்து உச்சகட்ட மகிழ்வுடன் விடை பெறுவார் என்று உலக கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
பலமான பிரான்ஸ்
மறுபுறம் பிரான்ஸ் கடந்த முறை கோப்பை வென்ற அணியாக மட்டுமின்றி, இந்த உலகக்கோப்பையிலும் ஒரு அதீத திறன் கொண்ட அணியாகவும் இதுவரை விளங்கியிருக்கிறது. அவர்கள் அணியின் பவர்ஃபுல் வீரர்கள் வரிசையும் அதற்கு ஒரு காரணம். போட்டியின் அரையிறுதியில் தான் அந்த அணி கொஞ்சம் தடுமாறியது. மொராக்கோவின் ஹக்கிம் ஜியேச், சோபியான் பௌஃபல் மற்றும் யூசுஃப் என் நெய்ஸ்ரி ஆகியோரின் நேரடி தாக்குதலை தடுக்க திணறுகையில் அவர்களின் டிஃபன்ஸ் திறன் குறித்த அச்சுறுத்தல் உடைக்கப்பட்டது.
கோல்டன் பூட் பந்தயம்
டிஃபன்ஸில் கோட்டை விட்டாலும், பிரான்ஸ் அட்டாகில் கூடுதல் ஆற்றல் செலுத்தி ஒருவழியாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. போட்டியின் அரையிறுதியில் மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தியோ ஹெர்னாண்டஸ் மற்றும் ராண்டல் கோலோ மௌனி ஆகியோர் பிரான்ஸ் அணிக்காக கோல் அடித்தனர். மொராக்கோவுக்கு எதிராக அவர்களின் ஸ்டார் வீரர் கைலியன் எம்பாப்பே கோல் எதுவும் அடிக்காததால், டிசம்பர் 14 புதன்கிழமை கோல்டன் பூட் பந்தயம் சூடுபிடித்தது.
யாருக்கு கோல்டன் பூட்?
எம்பாப்பே இப்போது FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டிக்கு செல்லும் முன் 5 கோல்கள் அடித்து லியோனல் மெஸ்ஸியுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். ஒருவேளை இருதிப்போட்டி முடிந்த பின்னும் இதே நிலை தொடர்ந்தால்? லியோனல் மெஸ்ஸியும் கைலியன் எம்பாப்பேயும் ஒரே அளவான கோல்களில் முடித்துவிட்டால் என்ன செய்வார்கள்? உலக கால்பந்து வரலாற்றில் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான கோல்டன் பூட் அப்போது யாருக்கு செல்லும்? என்கிற கேள்விகள் நம் மனதில் அலையடித்துக் கொண்டிருக்கின்றன அல்லவா…
ரூல்ஸ் எம்பாப்பேக்கு சாதகமா?
லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே அல்லது வேறு யாரேனும் இந்த லிஸ்டில் வந்து இணைந்து இவர்களோடு முதல் இடத்தை பகிர்ந்து கொண்டால், குறைந்த எண்ணிக்கையிலான பெனால்டி கோல்களைப் பெற்ற வீரருக்கு கோல்டன் பூட் வழங்கப்படும். இந்த நேரத்தில், லியோனல் மெஸ்ஸி நெதர்லாந்து, குரோஷியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு பெனால்டியை கோலாக மாற்றியுள்ளார், அதே நேரத்தில் எம்பாப்பேவின் அனைத்து கோல்களும் அவுட்பீல்டில் இருந்து வந்தவை. அதனால் கோல்டன் பூட் பந்தயத்தில் எம்பாப்பே முன்னிலையில் இருக்கிறார். ஒரு வேளை இருவருமே 5-5 என்று முடித்தாலோ அல்லது இருவருமே இந்த போட்டியில் தலா ஒரு கோல் அடித்து 6-6 என்று முடித்தாலோ, அல்லது அதற்கு மேல் சென்று சமமாக இருக்கும் பட்சத்தில் எம்பாப்பே கோல்டன் பூட் வாங்கி செல்வார். ஒரு வேளை மெஸ்ஸி கோல் அடித்து எம்பாப்பே கோலடிக்கவில்லை என்றால் மெஸ்ஸிக்கு கோல்டன் பூட் வந்து சேரும். இப்போது அந்த பிரச்சனை இல்லை, இருந்தாலும், அனுமானமாக மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே பெனால்டி மற்றும் அவுட்ஃபீல்ட் கோல்களின் எண்ணிக்கையிலும் சமமாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்படி இருந்தால் என்ன செய்வார்கள். அப்போது அசிஸ்ட் கோல் எண்ணிக்கையை கணக்கில் எடுக்கிறார்கள். யார் அதிக கோலில் பங்கு கொண்டிருக்கிறார் என்பதை வைத்து கணக்கிடுகிறார்கள். ஒரு வேளை அந்த நிலை வந்திருந்தால் இன்னும் சிக்கல் தான், அசிஸ்ட் கோல்களில் மெஸ்ஸி எம்பாப்பே இருவருமே 11 என்ற கணக்கில் தற்போதைக்கு சமமாக இருக்கிறார்கள்.