Dinesh Karthik on Dhoni: "தோனி வந்ததால், எனது கிரிக்கெட்டுக்கான கதவுகள் மூடப்பட்டன" - தினேஷ் கார்த்திக்
இந்திய அணிக்குள் தோனி வந்த பிறகு, எனக்கான கிரிக்கெட் கதவுகள் மூடப்பட்டதை நான் அறிந்துகொண்டேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமாகியவர் தினேஷ் கார்த்திக், இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ்சோப்ராவின் யூ டியூப் தொலைக்காட்சியில் அவருடன் கலந்துரையாடினார்.
அப்போது, அவர் பேசும்போது தோனி இந்திய அணிக்குள் வந்தபிறகு அவர் இந்த முழு நாட்டையும் தனது புயல்போன்ற ஆட்டத்தால் கைப்பற்றிவிட்டார். அதனால், இந்திய அணியில் எனக்கான கதவு அடைக்கப்பட்டதை நான் அறிந்துகொண்டேன். கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்பது எப்போதும் ஒரு மிகப்பெரிய பணி. சையத் கிர்மானி அப்போது இருந்தார். பின்னர், கிரன்மோர் வந்தார். எம்.எஸ்.தோனி ஒரு தலைமுறைக்கான கிரிக்கெட்டர்.
ராகுல் டிராவிட்டும், எம்.எஸ்.தோனியும் எனக்கு மிகுந்த நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்தனர். அடுத்தது என்ன? என்ற கேள்வியை என்னிடம் நானே கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு பேட்ஸ்மேனாக மாற வேண்டும் என்று முடிவுசெய்தேன். மிடில் ஆர்டர் அல்லது ஓபனிங் பேட்ஸ்மேனாக மாற வேண்டும் என்று முடிவு செய்தேன். எம்.எஸ்.தோனி என்னிடம் நீங்கள் மிகவும் திறமையான பேட்ஸ்மேன். உங்களால் ஆட்டத்தை தொடங்க முடியும் என்று ஊக்கப்படுத்தியுள்ளார். அது எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது.
ராகுல் டிராவிட் என்னிடம் உன்னிடம் முழு பேட்ஸ்மேனாக இருப்பதற்கான தகுதிகள் உள்ளது என்றார். இதையடுத்து, நான் உள்நாட்டு போட்டிகளில் ஆடத்தொடங்கினேன். உள்நாட்டு போட்டிகளில் நிறைய ரன்களை குவித்து இந்திய அணியில் தொடக்க வீரராகவும் வாய்ப்புகளை பெற்று சிறப்பாக ஆடினேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
தினேஷ் கார்த்திக் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். எம்.எஸ்.தோனி அணியில் இடம்பிடிப்பதற்கு முன்பாகவே தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியிலும், ஒருநாள் போட்டியிலும் அறிமுகமாகியவர். ஆனால், அவரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத காரணத்தால் அவருக்கு பதிலாக எம்.எஸ்.தோனிக்கு கங்குலி வாய்ப்பு அளித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக தோனி தான் ஆடிய 5-வது ஒருநாள் போட்டியிலே மாபெரும் சதத்தை எடுத்து இந்திய அணியில் தன்னை தக்க வைத்தார். பின்னர், தனது உழைப்பால் இந்திய அணியின் கேப்டனாகவும் பொறுப்பேற்று மூன்று உலககோப்பையை வென்று தந்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் 2007-ஆம் ஆண்டு இந்திய அணி முதன்முறையாக இங்கிலாந்தில் தொடரை கைப்பற்றியதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். 3 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் தினேஷ் கார்த்திக் 263 ரன்களை குவித்து இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். சச்சின் டெண்டுல்கர், ராகுல்டிராவிட், லட்சுமணன், கவுதம் கம்பீர், வாசிம் ஜாபர் ஆகியோர் விளையாடிய அந்த தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை குவித்த வீரராக தினேஷ் கார்த்திக்கே இடம்பிடித்தார்.
மேலும், வங்காளதேசத்திற்கு எதிரான நிதாடஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்களை குவித்ததும், குறிப்பாக ஒரு பந்தில் 6 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்ததும் இந்திய ரசிகர்களால் மறக்கமுடியாத நிகழ்வாகும்.